பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினை
தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. தானிய வகைகளில் தினையும் ஒன்று. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.
குதிரைவாலி
மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் - இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
கம்பு
அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.
சோளம்
அமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
வரகு
வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.
கேழ்வரகு
உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும்.