வருமான வரி துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித்துறை விதித்துள்ளது. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடி அவர்களே பயப்பட வேண்டாம், காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல, மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி என தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை என்றும் தலைவணங்கவும் மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் கடைசி வரை போராடுவார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.