பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக விமான பயணங்களின்போது சக பயணிகள் மற்றவர்கள் மீது மது போதையில் சிறுநீர் கழித்துவிடும் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை போல தற்போது ரயிலிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள கல்கத்தா நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அதில் அம்ரித்சரை சேர்ந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயம் மது அருந்திவிட்டு போதையில் வந்த டிக்கெட் பரிசோதகரான பீகாரை சேர்ந்த முன்னா குமார், உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரின் மனைவி மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார் கத்தி கூச்சலிடவே விழித்த சக பயணிகள் டிடிஆர் முன்னா குமாரை சிறைபிடித்துள்ளனர்.
விரைவு ரயில் உத்தர பிரதேசத்தின் சார்பஹ் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது முன்னா குமாரை அவர்கள் ரயில்வே போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.