தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது - சுகேஷ் அந்த பல்டி
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:51 IST)
தினகரனை யார் என்றே எனக்கு தெரியாது, நான் எந்த தவறும் செய்யவில்லை என டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க ரூ.60 கோடி பேரம் பேசியதாக, தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் செய்த விசாரணையை அடுத்து, தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார் அவருக்கு அளித்த சம்மனை அடுத்து, கடந்த 22ம் தேதி அவர் டெல்லிக்கு சென்றார்.
3 நாட்கள் விசாரணைக்கு பின்னும், தினகரனிடமிருந்து தெளிவான பதிலை டெல்லி போலீசாரால் பெற முடியவில்லை. தினகரன் தரப்பு சுகேஷ் சந்திரசேகருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்), தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட ஆதாரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, இல்லை, தெரியாது, இம்பாசிபிள் என ஒற்றை வார்த்தைகளிலேயே தினகரன் பதில் அளித்துள்ளார். சில கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாய் இருக்கிறார். மேலும், யாகேஷ் ஒரு நீதிபதி என நினைத்து பேசினேன் என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் 4 நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சுகேசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய இன்று டெல்லி போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகேஷ் “ தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக யாரிடம் பணம் வாங்கவில்லை. என்னுடைய குற்றப் பின்னணியை அடிப்படையாக கொண்டு, இந்த வழக்கில் என்னை போலீசார் பலிகாடா ஆக்கியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ், தினகரன் யார் என்றே தனக்கு தெரியாது எனக்கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்