இந்தியாவில் ஆன்லைன் லோன் செயலிகள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைனில் இன்ஸ்டண்ட் லோன் வழங்கும் செயலிகளில் புழக்கம் அதிகரித்துள்ளது. சில நிமிடங்களில் பணம் கிடைத்துவிடுவதால் மக்கள் இதுபோன்ற உடனடி லோன் ஆப்களில் கடன் பெறுகின்றனர். பின்னர் கடன் செலுத்தியிருந்தாலும், செலுத்தா விட்டாலும் அவர்களுக்கு போன் செய்து மிரட்டுவது, அவர்களது புகைப்படங்களை மார்ப் செய்து மிரட்டுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் லோன் செயலிகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி கடன் வழங்கும் லோன் செயலிகள் கடனை பெற்றவரின் வங்கி கணக்கு மூலமாகவே பணம் பெற முடியும். நேரடியாக கடன் பெற்றவரை செலுத்த சொல்லி வற்புறுத்த முடியாது.
அதுபோல செலுத்தப்படும் பணம் கடன் பெற்றவரின் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக கடன் வழங்கிய நிறுவனத்தின் கணக்கிற்கே செலுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குபவர் அல்லது மூன்றாம் நபரின் கணக்குகளின் வழியாக பரிவர்த்தனை செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல கடன் வாங்கியவரின் ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பு தொகையை அதிகரிக்க முடியாது என்றும், கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் வட்டியை அபராதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் செலுத்தி வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.