பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்களை பாதுகாக்க அரசு தவறியதாக குற்றம்சாட்டி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ரணுவமும் பதிலுக்கு பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் எல்லையோர கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலியாவது நடைபெற்று வருகிறது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் இருந்து அரசு மக்களை பாதுகாக்க தவறியதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர்.