நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென எதிரே வந்த பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது.
இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சி அடைந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அதோடு, இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்து வருகின்றது. மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை செய்த அமைச்சரவை பதில் தாக்குதலுக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலை நடத்திய ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை பாகிஸ்தான் ஊடங்கள் சுதந்திர போராட்ட வீரனாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ஆம், பாகிஸ்தானின் தினசரி பத்திரிகையான தி நேஷன் என்ற பத்திரிகையில் சுதந்திர போராட்ட வீரர் நடத்திய தாக்குதல் ("Freedom fighrter launches attack") என்ற தலைப்பில் புல்வாமா தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.