ஐந்து பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 34 வயது நபர் ஒருவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சத்தியஜித் சமால் என்ற 34 வயது நபர் தான் ஒரு போலீஸ் அதிகாரி என ஏமாற்றி திருமண இணையதளங்கள் மூலம் அடுத்தடுத்து ஐந்து பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்களிடம் இருந்து வரதட்சணையாக கார், பைக், தொழில் செய்ய பணம் என லட்சக்கணக்கில் பறித்துள்ளதாக தெரிகிறது.
ஐந்து பெண்களில் ஒருவர் வங்கியில் தனிநபர் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சமால் என்பவர் மோசடி செய்கிறார் என்பதை கண்டுபிடித்த ஐந்து பெண்களில் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
அவருடைய மொபைல் போனை ஆய்வு செய்தபோது 49 பெண்களுடன் தொடர்பில் இருந்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஐந்து பெண்களிடம் இருந்து வாங்கிய கார், மோட்டார் சைக்கிள், லட்சக்கணக்கில் ரொக்கம், கைத்துப்பாக்கி, திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கைப்பற்றி மூன்று வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கியுள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஐந்து பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.