விமானத்தில் கன்னய்ய குமாரை கொலை செய்ய முயன்றதாக அவர் மும்பை விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புனேவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை யிலிருந்து புனே செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கன்னய்ய குமார் ஏறியுள்ளார். அப்போது விமானத்தில் இருந்த ஒருவர் மிகுந்த ஆத்திரத்துடன் வந்து தன்னை தாக்கியதாகவும் தன் கழுத்தை நெரித்து கொலை செய்யமுயன்றதாகவும் அப்போது தன்னருகில் இருந்த சக தோழர்கள் தன்னை காப்பாற்றியதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
தான் தாக்கப்படும் போது சக பயணிகளும், விமான ஊழியர்களும், தன்னை காப்பாற்ற தவறிவிட்டனர்; உடனடியாகத் தான் விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் புகாரளித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கன்னய்ய குமார், ”ஜெட் ஏர்வேல்ஸ் நிறுவனம் தாக்கியவருக்கும் தாக்கப்பட்டவருக்கும் வேறுபாடு காணத் தவறிவிட்டது; மனாஸ் தேகா என்ற டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்து மதவெறியரான பாஜகவின் ஆதரவாளர்தான் என்னை தாக்கினார்.
கருத்து ரீதியான எதிர்ப்பை தெரி விக்கமுடியாமல் தாக்குதல் நடத்துவது ஒன்று தான் உங்களுக்கு ஒரே சாதனமா” என்று பதிவு செய்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யா குமார் இந்தியாவிற்கு எதிரான கோஷம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.