நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜூலை 12ம் தேதியும் சிபிஐ வழக்கில் இன்றும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.
இதையடுத்து சிறையில் இருந்து இன்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் திரண்டு கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தேன் என்றும் இருந்தும், என்னை சிறையில் அடைத்தார்கள் என்றும் தெரிவித்தார்.
கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தால் அவரது மன உறுதி உடைந்து விடும் என்று நினைத்தார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இன்று நான் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என தெரிவித்த கெஜ்ரிவால், என் மன உறுதி 100 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் என் பலம் 100 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார். நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.