ராமர் கோவில் திறப்பையொட்டி நடந்த ராம நாடகத்தில் அனுமராக நடித்தவர் மேடையிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமருக்கு கட்டப்பட்டுள்ள கோவில் திறக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் ராமர் கோவில் திறப்பை கோலாகலமாக கொண்டாடினர். இதற்காக பல மாநிலங்களும் பொது விடுமுறை அறிவித்திருந்த நிலையில் மக்கள் பல பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள் உள்ளிட்டவற்றை நடத்தினர்.
அந்த வகையில் ஹரியானா மாநிலம் பிவானியில் ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் வந்து பார்த்த அந்த நாடகத்தில் நாடக கலைஞர் ஹரிஷ் மேத்தா என்பவர் அனுமன் வேடமிட்டு சிறப்பாக நடித்து வந்துள்ளார். அப்போது ஒரு காட்சியில் அவர் மயங்கி விழுந்துள்ளார். முதலில் அது நாடகத்தின் ஒரு பகுதி என மக்கள் நினைத்துள்ளனர். ஆனால் அவர் திரும்ப எழாததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராமர் கோவில் திறப்பு அன்று அனுமராக நடித்தவர் மாரடைப்பால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.