Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'வாட்ஸ்ஆப்' மூலம் போலீஸ் மீது புகார் அனுப்பலாம்: டெல்லியில் நவீன ஏற்பாடு

Advertiesment
'வாட்ஸ்ஆப்' மூலம் போலீஸ் மீது புகார் அனுப்பலாம்: டெல்லியில் நவீன ஏற்பாடு
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (16:59 IST)
'வாட்ஸ்ஆப்' மூலம் போலீஸார் மீதான புகார்களை அனுப்ப டெல்லி போலீஸ் நவீன ஏற்பாடு செய்துள்ளது.
 
டெல்லி போலீஸில் புகார் தெரிவிக்க தற்போது, ‘1064’ மற்றும் ‘1800111064’ ஆகிய இரண்டு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில 20 போலீஸார் 24 மணி நேரமும் இந்த எண்களில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
இப்போது கூடுதலாக, ‘வாட்ஸ்ஆப்’ என்ற குறுந்தகவல் அனுப்பும் தொழில்நுட்பம் மூலம் புகார்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் (லஞ்ச ஒழிப்பு பிரிவு) சிந்து பிள்ளை கூறியதாவது:-
 
டெல்லி போலீஸார் யாராவது லஞ்சம் கேட்டாலோ, பொதுமக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ அதை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் படம் பிடித்து டெல்லி போலீஸுக்கு அனுப்பி வைக்கலாம். ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய பதிவுகள் மூலமும் படம் பிடித்து ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பி வைக்கலாம்.
 
இந்த வசதி கடந்த 6 ஆம் தேதி முதல் டெல்லி போலீஸில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு புகார் வந்துள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வசதியின் கீழ் புகார்கள் வந்தால், முதலில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும். உண்மை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனே தற்காலிக பணிநீக்கமும் செய்யப்படுவார், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என சிந்து பிள்ளை கூறினார்.
 
‘வாட்ஸ்ஆப்’ புதிய வசதி குறித்து டெல்லி மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் ஊடகங்களில் டெல்லி போலீஸ் விளம்பரம் செய்துள்ளது. இந்த நவீன வசதி டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸியின் எண்ணத்தில் உதித்தது என்று கூறப்படுகிறது.
 
தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புப் பிரிவு ஐ.ஜி. வெங்கட்ராமன் கூறும்போது, "குற்றங்களை கண்டுபிடிக்க தகவல் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. ஆனால் லஞ்ச விவகாரத்தில் இது முழுமையான பலனை கொடுக்காது. வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை பெற முடியுமே தவிர, அது உண்மையா என்பதை விசாரணை நடத்தி மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
 
ஒரு போலீஸ்காரரிடம் சட்டப்பூர்வமான ஒரு வேலையை முடித்துவிட்டு, அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் சில்லறை வாங்குகிறீர்கள். அதை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் போலீஸ்காரர் உங்களிடம் பணம் வாங்குவது மட்டும்தான் தெரியும். ஆனால் அங்கு நடந்த எந்த விவரமும் நமக்கு தெரியாது. எனவே தகவலுக்காக மட்டும் வாட்ஸ்அப் புகாரை பயன்படுத்தலாமே தவிர, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இது பயன்படாது. இதில் சட்டரீதியாக நிறைய சிக்கல்களும் உள்ளன.
 
ஒரு புகாரை வீடியோ ஆதாரத்துடன் சம்பந்தப்பட்டவரே நேரடியாக வந்து கொடுத்தாலும், அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil