Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அங்கித் திவாரி வழக்கு - தமிழக அரசுக்கு நோட்டீஸ்! உச்சநீதிமன்ற உத்தரவு..!!

supremecourt ed

Senthil Velan

, வியாழன், 25 ஜனவரி 2024 (16:51 IST)
அங்கி திவாரி வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட மனு மீது 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். 
 
webdunia
இதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தனர். 
 
இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதில்லை என்றார்.
 
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை எந்தவித விசாரணையும் நடத்தாதது ஏன் என்றும் அசாம் முதல்வர் மீது எப்ஐஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததா என்றும் கேள்வி எழுப்பினார். 

webdunia
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் . அதே வேளையில், அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் எடுக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்று நீதிபதி கூறினார். 
 
மேலும் அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை அளித்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி விஸ்வநாதன், அங்கித் திவாரி கைது பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். 

 
மேலும், அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறை தொடர்ந்து மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்!