டில்லியில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் புகுந்த நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.
டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இதனால், டில்லியின் மேற்கு பகுதியில் உள்ள ராஜேந்திர நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இரு பெண்கள் உட்பட மூன்று மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர்.
இந்த விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீசார் நேற்று (28.07.2024) கைது செய்தனர்.
அலட்சியமாக செயல்படுதல், விதிகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவர்கள் பலியான விவகாரத்தில் இன்று மேலும் ஐந்து பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.