நாட்டின் தேசியப் பாரம்பரிய விலங்காக யானையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது 25 ஆயிரம் யானைகள் உள்ளன. சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது போலவே யானையையும் பாதுகாக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது.
இந்த நிலையில், `யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போலவே, தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்' என்றும் யானைகள் திட்ட குழு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.
இதற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, கடந்த 13-ந் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக, தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டுள்ளது.