Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் - விமர்சனம்

Advertiesment
நான் விமர்சனம்
, சனி, 18 ஆகஸ்ட் 2012 (12:10 IST)
FILE
நான் என்றால் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கார்த்திக் என்கிற முகமது சலீம் என்கிற அசோக்கின் கதாபாத்திரம். குழப்பமாக இருக்கிறதா? இந்த குழப்பம்தான் நான் என்ற த்‌ரில்ல‌ரின் கதை.

தந்தைக்கு தாய் செய்யும் துரோகத்தை மகன் கார்த்திக் போட்டுக் கொடுக்கிறான். தந்தை தற்கொலை செய்து கொள்ள தாயையு‌ம், கள்ளக் காதலனையும் உயிரோடு எ‌ரித்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு செல்கிறான். அங்கிருந்து இளைஞனாக திரும்பும் கார்த்திக்கை (விஜய் ஆண்டனி) அவனது முன்கதை சுருக்கம் சித்தப்பா வீட்டிலிருந்து துரத்துகிறது. வேலை தேடி சென்னை கிளம்புகிறான். போகிற வழியில் பேருந்து விபத்துக்குள்ளாக அதில் இறந்து போகும் முகமது சலீம் என்பவனின் உடமைகளுடன் எஸ்ஸா‌கி, அவனது சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூ‌ரியில் முகமது சலீம் என்ற பெய‌ரில் சேர்கிறான். துரதிர்ஷ்டவசமாக நண்பனுடன் ஏற்படும் கைகலப்பில் நண்பன் இறந்து போக அவன் பெய‌ரிலும் நடிக்க வேண்டியிருக்கிறது. அந்த நாடகத்துக்காக மேலுமொரு கொலை. கொலையுண்டவர்களின் பினாமியாக கார்த்திக் போடும் தப்பாட்டத்தை சின்ன செண்டிமெண்டுடன் தொடரும் போட்டு முடிக்கிறார்கள்.

தமிழில் த்‌ரில்லர்கள் அவ்வளவாக எடுப்பதில்லை. அபூர்வமாக ஈர‌ம், யாவரும் நலம் என்று சில வரும். அந்த லிஸ்டில் நானை வைக்க முடியுமா?

கார்த்திக் முகமது சலீமாக மாறி நண்பன் அசோக்கின் (சித்தார்த்) கொலைவரை அப்படியே நம்மை இழுத்துக் கொண்டு போகிறது படம். இடைவேளைக்குப் பிறகு மிமிக்‌ரியிலேயே காட்சிகளை நகர்த்தி சோர்வடைய வைக்கிறார் இயக்குனர். விஜய் ஆண்டனியை முகமது சலீமாக தெ‌ரிந்திருப்பவர்கள் இருக்கையில் அசோக்காக தெ‌ரிந்து வைத்திருப்பவர்கள் வரும் காட்சிகள் அடுத்தடுத்து வந்து சலிப்பின் அளவை கூட்டுகின்றன.

விஜய் ஆண்டனிக்கு படம் முழுக்க முகத்தை அப்பாவியாகவு‌ம், இறுக்கமாகவும் வைத்திருக்க வேண்டிய கதாபாத்திரம் என்பதால் தப்பித்து விடுகிறார். முக்கியமான கட்டங்களில் உணர்ச்சிகள் வெளிப்படாமல் முகத்து தசை இறுகிப் போகிறது. ஆனாலும் நடிப்பில் பாஸ் என்றுதான் சொல்ல வேண்டும். சித்தார்த்து‌ம், ரூபா மஞ்ச‌ரியும் இளமைக்கான ஏ‌ரியாவை பில்லப் செய்கிறார்கள். இவர்கள் காதலிக்கிறார்களா இல்லை வெறும் டேட்டிங்கா என்ற குழப்பம் இருப்பதால் ரூபா சித்தார்த்துக்காக அழும் போது சென்டிமெண்ட் வொர்க் அவுட்டாகாமல் போகிறது.

நாயகனுக்கு ஆக் ஷன் செட்டாகாது என்று கவனமாக தவிர்த்திருப்பதற்கு ஒரு சபாஷ். ஒரே பீர் பாட்டிலில் பிளாக்மெயில் செய்யும் போலி அப்பாவையு‌ம், சீனியர் மாணவனையும் ஹேண்டில் செய்யுமிடத்தில் ரசிகர்கள் மறந்து கைத்தட்டுகிறார்கள். இதேபோல் நாலைந்து காட்சிகள் இருந்திருந்தால் படத்தின் கலெ‌க் ஷன் ஏ‌ரியா கவராகியிருக்கும்.

விஜய் ஆண்டனியின் சின்ன வயசு பிளாஷ்பேக்கை பின்னணி இசைதான் ஓரளவு பார்க்க வைக்கிறது. ஒட்டு மொத்தமாக இல்லாவிட்டாலும் அங்கங்கே பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களின் எண்ணிக்கையு‌ம், எடுத்திருக்கும் விதமும் இதம். த்‌ரில்லருக்கு‌ரிய கதைக்களத்தை சுவாரஸியமாக உருவாக்கியிருப்பது, உறுத்தாத பின்னணி இசை, கதையோடு இயைந்து வரும் கேமரா, எடிட்டி‌ங், வசனம் என்று எல்லாமே ஓகே. இடைவேளைக்குப் பிறகான இயக்குன‌ரின் தடுமாற்றமு‌ம், பாதி பந்தியில் எழுப்பியது போன்ற திடீர் முடிவும்தான் பின்னடைவுகள்.

மிமிக்‌‌ரி காட்சிகளை குறைத்து போலீஸ் விசாரணைக்கு இடம் கொடுத்திருந்தால் நான் இன்னும் மேம்பட்டிருக்கும்.

நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil