எவ்வளவு சுவாரஸியமான கதையாக இருந்தாலும் மேக்கிங் சரியாக அமையாதபட்சத்தில் அப்படங்கள் சுவாரஸியத்தை தவறவிட்டு விடுகின்றன என்பதற்கு சிறந்த உதாரணமாக வெளிவந்திருக்கிறது சமர்.
1998 ல் ஜிம் கேரியின் நடிப்பில் வெளிவந்த தி ட்ரூமேன் ஷோ படத்தின் சாயலை கொண்டது சமரின் கதை. ஊட்டியில் வனத்தை சுற்றிக்காட்டும் ட்ரெக்கராக இருக்கும் விஷால் தன்னிடம் ப்ரேக்கப் சொல்லி பாங்காக் சென்ற காதலி சுனைனாவைத் தேடி வருகிறார். வந்த இடத்தில் ஒரு கும்பல் துரத்தி துரத்தி அவரை கொலை செய்ய முயல்கிறது. இன்னொரு கும்பல் நீங்க மல்டி மில்லியனர் என்று உருகி உருகி உபசரிக்கிறது. நான் நீங்க நினைக்கிற ஆளில்லை என்று எடுத்துச் சொன்னாலும் யாரும் நம்புவதாக இல்லை. அவரின் பாஸ்போர்ட்டும், கையெழுத்தும்கூட அவருக்கு எதிராகவே இருக்க உண்மையிலேயே குழம்பிப் போகிறார்.
பாங்காக்கு சக பயணியாக வரும் த்ரிஷாதான் விஷாலுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். ஒருகட்டத்தில் அவரையும் ஒரு கும்பல் கடத்த, தன்னைச் சுற்றி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் என்னவென்று பார்க்க முஷ்டி முறுக்குகிறார் விஷால்.
நிச்சயமாக இது சுவாரஸியமான கதைதான். முதல்நாள் மில்லியனர் என்று மரியாதை காட்டும் நபர்கள் இரண்டாவது நாளே கெட் அவுட் சொல்லி துரத்துவதும், உங்க பிஏ சார் என்று பவ்யம் காட்டுகிற ஜான் விஜய் உண்மையில் ஒரு பிம்ப் என்று தெரிய வருவதும் விஷாலைப் போலவே நம்மையும் என்னடா நடக்குதிங்கே என்று ஆர்வத்துடன் கேட்க வைக்கிறது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் யார் காரணம்? எதற்கு இந்த விளையாட்டு? விஷால் எப்படி இதனை முடித்து வைத்தார்?
இந்த மூன்று கேள்விகளில் முதலிரண்டை சாதாரணமாகவும், கடைசியை திராபையாகவும் சொல்கிறது படம்.
இந்தப் படத்தின் முதல் கோணல் கதைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத விஷாலின் அறிமுக சண்டைக் காட்சியும், சண்டையின் தொடர்ச்சியோ என்று எண்ண வைத்த பாடலும்.
இரண்டாவது வசனங்கள். புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்து கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியமாக சூழலுக்கும் சம்பந்தமில்லாத வசனங்கள். இதன் காரணமாக உணர்ச்சிகரமாக அமைய வேண்டிய விஷால், சுனைனா பிரேக்கப் காட்சியும், விஷால், த்ரிஷா தண்ணியடித்தபடி பேசும் காட்சியும் வெற்று நாடகமாகிவிடுகிறது.
FILE
சில இடங்களில் இந்த புத்திசாலித்தனம் சிங்காகி சிரிப்பை வரவழைப்பதையும் சொல்ல வேண்டும். வில்லன்களின் பிளாஷ்பேக்கை வாய்ஸ் ஓவரில் நறுக்கென்று எடுத்துரைப்பதில் மட்டும் வசனகர்த்தா பாசாகிறார்.
குழப்பமும், பதற்றமுமான முகபாவத்திற்கு பதில் வயித்துவலிக்காரரைப் போல் உடலை முறுக்கிக் கொண்டு அழுவதும், ஹிஸ்டீரியா பேஷண்டாக அலறுவதுமாக விஷாலின் நடிப்பில் இம்சையின் சதவீதம் அதிகம்.
வில்லன்களாக வரும் ஜே.டி.சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவரையும் கேமரா முன் நடிக்க வைப்பதற்கு முன் சிரிப்பு வாயுவை சுவாசிக்க வைத்திருப்பார்கள் போல. இரண்டு திறமையான நடிகர்களை சிரிக்க வைத்தே சீரழித்திருக்கிறார் இயக்குனர்.
வில்லன்களின் விளையாட்டை அடுத்த படத்தில்தான் சொல்வார்களோ என்று நினைக்கிற அளவுக்கு இழுத்து விஷால் அவர்களை திருப்பிடிக்கிற காட்சியை ஒரேயொரு சண்டையுடன் சப்பென்று முடித்திருப்பது படத்தின் டெம்போவை காலி செய்கிறது. தன்னைப் போலவே வில்லன்களையும் விஷால் சுற்றலில் விடுவதை இன்னும் விரிவாக சுவாரஸியமாக காட்டியிருந்திருந்தால் சமரின் சக்சஸ் வேல்யூ கூடியிருக்கும்.
ஜஸ்ட் பாஸ் பாடல்கள். தவறான பிளேஸ்மென்டால் அதையும் ரசிக்க முடிவதில்லை. ஒளிப்பதிவும், ஆக்ஷன் காட்சிகளும் கச்சிதம். ஆரம்ப வசனக்காட்சிகளில் கத்திரி போட்டிருக்கலாம்.
விஷாலைவிட த்ரிஷா, சுனைனா இருவரின் பிரசன்ஸும் படத்துக்கு கூடுதல் பிளஷர். கொஞ்ச நேரமே
FILE
வந்தாலும் கும்மென்று கண்ணில் தங்கிவிடுகிறார் சுனைனா. த்ரிஷாவின் முகம் சிலநேரம் வயசாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை தந்தாலும் கச்சிதமான அழகு, சேச்சே அப்படியெல்லாம் இல்லை என்று அடித்துச் சொல்கிறது. த்ரிஷாவும் ஆட்டத்தின் ஒரு காய் என்பது எதிர்பார்த்த டிவிஸ்ட்.
கதை விஷயத்தில் ஜீனியசாக யோசித்த இயக்குனர் மேக்கிங்கில் எல்கேஜி லெவலில் தடுமாறியிருக்கிறார். சமரின் பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க் கொலாப்சானது பில்டிங்.