சருமத்தைப் பராமரிக்க அதிக விலையுள்ள க்ரீம்களைப் போட வேண்டும் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.
ஆனால் மிக எளிய முறையில் நமது சருமத்தைப் பாதுகாக்க முடியும் என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
இனி அவரே தொடர்கிறார்.
வீட்டில் இருப்பவர்களாகட்டும், வேலைக்குச் செல்பவர்களாகட்டும், அவர்களது சருமத்தை மிக எளிய முறையில் பாதுகாக்கலாம்.
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பவர்களுக்கு குறைவாகத்தான் பருக்கள் வரும். சருமம் பொலிவாக இருக்கும்.
வீட்டில் பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதனை மிக்சியில் ஒரு அடி அடித்து அதனை முகத்தில் போட்டு 10 நிமிடம் ஊற விடலாம். இது எந்த பழமாக இருந்தாலும் சரி. ஆனால் பழத்தோலை மிக்சியில் போடுவதற்கு முன்பு மிக்சியை சுடுநீரில் ஒரு முறை கழுவிவிட்டு போடுவது நல்லது.
அதேப்போல அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதை வேண்டுமானாலும் முகத்தில் ஒரு 10 நிமிடம் ஊறவிட்டு அலசினால் நல்லது.
கடைகளில் தற்போது நல்ல மாஸ்ச்சுரைசிங் க்ரீம்கள் வந்துள்ளன. அவற்றை வீட்டில் இருக்கும் சமயங்களில் போடலாம். விட்டமின் ஈ க்ரீம்களையும் போடலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் தேய்க்கலாம். இப்படி முகத்தை எளிய முறையில் பாதுகாத்து பராமரிக்கலாம்.
தக்காளி, பப்பாளி, ஆப்பிள் என வாரத்தில் இரண்டு முறையாவது எதையாவது ஒன்றை முகத்தில் ஊறவிட்டு அலசி வந்தால் உங்கள் முகம் மெல்ல மெல்ல பொலிவு பெறுவதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.