முந்தைய காலத்தில் குழந்தை பிறந்த பின் தான் அதை நாம் பார்க்க முடியும். ஆனால் தற்போது ஸ்கேனிங் மூலமாக குழந்தையை பார்க்கலாம், அதன் இதயத் துடிப்பையும், மூச்சு விடுவதையும் கூட உணர முடியும்.இது அறிவியல் கண்டுபிடிப்புகளின் மகத்தான் சாதனையாகும்.ஆனாலும் ஸ்கேன் எடுப்பதால் பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் பலரும் கூறுகிறார்கள். ஸ்கேன் எடுப்பதால் குழந்தையை பாதிக்கும் என்றும் பலரும் கூறுவார்கள்.ஆனால் ஸ்கேன் எடுக்காமல் இருந்திருந்தால் எத்தனையோ பிரச்சினைகள் தற்போது இருந்திருக்கும் என்பதுதான் உண்மை. அதாவது முதலில் கருவுற்றிருப்பதை உறுதி செய்த முதல் 3 மாதத்திற்குள் ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். இது எதற்காக என்றால், உண்மையிலேயே கரு கர்ப்பப்பையில்தான் உருவாகியிருக்கிறதா அல்லது கருக்குழாயில் உருவாகி இருக்கிறதா என்பதை கண்டறியத்தான். ஒரு வேளை கரு கருக்குழாயிலேயே உருவாகி இருந்தால் அதனை மெல்ல நகர்த்தி கர்ப்பப்பையில் சேர்க்கும் சிகிச்சையை மேற்கொண்டு கருவை வளர விடலாம்.அல்லது கருக்குழாயில் தங்கிய கருவின் வளர்ச்சி தடைபட்டு போயிருந்தால் அதனை உடனடியாக வெளியேற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.இவை அனைத்தும் ஸ்கேனிங் முறையில் மட்டுமே நாம் அறிய முடியும். அவ்வாறு ஸ்கேன் செய்யாமல் இருந்தால் கருக்குழாயில் வளரும் கரு வளர்ந்து அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்தாக நேரிடும். கரு வளர்ச்சி அடையாமல் தடைபட்டால் பல மாதங்கள் கழித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். அப்போது அதன் தன்மை மாறி அறுவை சிகிச்சையின் மூலமே அகற்றும் நிலை கூட ஏற்படலாம்.மேலும், ஒரு கர்ப்பிணிக்கு 3, 5, 7, 9வது மாதங்களில் ஸ்கேனிங் செய்கிறார்கள். அந்த சமயங்களில் வளரும் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக அதற்கேற்ற சிகிச்சைகளை அளிக்கும் வசதிகளும் தற்போது வந்துவிட்டன.கருவிற்கு மூச்சு விடுவதில் சிக்கல், சில பலவீனங்கள் போன்றவற்றை கர்ப்பப்பையிலேயே சிகிச்சை அளித்துவிடுகிறார்கள். தொப்புள் கொடியில் கட்டி, நீர்க்கட்டிகள் போன்றவற்றையும் துல்லியமாக கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை அளிக்கிறார்கள். அவ்வாறு சரி செய்ய முடியாத நிலையாக இருந்தால் உடனடியாக கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கிறார்கள். நிறை மாதமாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு தொப்புள் கொடியில் ஏதேனும் பாதிப்படைந்து அதன் மூலமாக குழந்தைக்கு உணவு செல்வது பாத்திருந்தால் பிரசவ வலி வரும் வரை காத்திராமல் உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்து தாயையும், சேயையும் காப்பாற்றுகின்றனர்.கருவின் வளர்ச்சி பாதித்திருந்து, 75 விழுக்காடு ஊனமாக பிறக்கும் என்று நிரூபணமானால் அந்த குழந்தையை கருச்சிதைவும் செய்ய வழி ஏற்படுகிறது.குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருவிலேயே பெண் குழந்தையை அழிக்கும் ஒன்றை மட்டும்தான் அரசு தடை செய்துள்ளது.
மேலும், ஸ்கேன் செய்வதற்கு அனுமதி அளிக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தறிவதை ஒழுங்குபடுத்தும் சட்டத்தைப் பற்றி நாம் அறிவோம்.
மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒன்றாம் தேதி (1.1.1996) லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய சட்டத்தின்படி கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை மட்டும் ஆராய்ந்துணரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என ஆராய்ந்துணர்வதை தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறுவோறுக்கு தண்டனையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
த ப்ரிநேடல் டையக்னோஸ்டிக் டெக்னிக் (ரெகுலேஷன் மற்றும் ப்ரிவெண்டிங் ஆ ஃப் மிஸ்யூஸ்) ஆக்ட் என்பது கருவில் உள்ள வளரும் குழந்தை பெண்ணா என்பதனை கண்டறிந்து பெண்சிசு கொலை செய்வதை தடுத்து நிறுத்த வகை செய்யும் நடைமுறையில் உள்ள சட்டம்.
பெண்களின் கர்ப்பக் காலத்தில் ஸ்கேன் எடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்பதில் உண்மையில்லை. கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சோனாகிராம் என்கிற ஸ்கேன் பரிசோதனையை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
இதனால் தாய்க்கோ அல்லது வயிற்றில் உள்ள சிசுவுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
இதனால் ஸகேன் எடுப்பது பற்றி பலரும் பலவாராக கூறும் தவறான கருத்துக்களை நம்பி அதனை தவிர்ப்பது உங்களுக்கும், உங்களது குழந்தைக்கும் ஏற்படும் பிரச்சினையை அதிகரிக்கும் என்பது மட்டும்தான் உண்மை.
அடுத்த கட்டுரையில், கருச்சிதைவு பற்றி பார்க்கலாம்.