கர்ப்ப காலத்தில் வரும் பிரச்சினைகள் பல... அதில் ஒரு சில ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும். பொதுவாக ஏற்படும் மசக்கை கூட ஒரு சிலருக்கு இருக்காது.
ஒரு சில பெண்கள் மசக்கை என்பதை என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள். எப்போதும் போல் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். வாந்தி பிரச்சினையும் இருக்காது.
எல்லோரும் இதுபோல் இருக்க மாட்டார்கள். மசக்கையிலும் ஒரு சிலருக்கு அதிகப்படியான வாந்தி, மயக்கம் ஏற்படும். ஒரு சிலருக்கு எப்போதாவது வாந்தி ஏற்படும்.
அதுபோல் கருவுற்ற இரண்டாவது மூன்றாவது மாதங்களில், வளரும் கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப்பைகளின் உள்ளடுக்கில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும். அதுபோல் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும், ஒரு சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உடலுறவின் மூலமாகவோ அல்லது பிறப்புறுப்புகள் சுத்தமின்றி இருப்பதாலோ ஏற்படலாம். சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் ஏற்படும். வயிற்றின் இரண்டு பக்கங்களிலும் வலி ஏற்படும். இதில் ஏதேனும் ஒரு அறிகுறி தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சிறுநீர் தொற்று தீவிரமடைந்தால் கடுமையான குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும். இதனைத் தடுக்க கர்பிணிகள் உடலுறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதும், அதிகமாக தண்ணீர் அருந்துவதும் அவசியமாகிறது.
ஆங்கிலத்தில் மார்னிங் சிக் என்று சொல்லுவார்கள். அதாவது கர்ப்ப காலத்தில் காலை வேலையில் அதிகமான மயக்க நிலை இருக்கும். சில நேரங்களில் தீவிரமான தூக்கம் ஆக்ரமிக்கும். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தூங்க சென்று விடுவார்கள். இதுவும் மசக்கையின் ஒரு நிலை தான்.
கர்ப்பிணிகளுக்கு நூற்றில் ஒருவருக்கு தோல் அரிப்புப் பிரச்சினை உருவாகும் என்பது பலருக்கும் தெரியாது. தோல் முழுவதும் சிறு சிறு கொப்புளங்கள் போல ஒன்றிரண்டு தோன்றி அது உடல் முழுவதும் பரவி மிகவும் சிரமப்படுத்தும். இது நூற்றில் ஒருவருக்குத்தான் வரும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குறிப்பிட்ட மருத்துவம் எதுவும் கிடையாது. சில மருத்துவ குணம் வாய்ந்த சோப்புகளும், ஆயில்மென்ட்டுகளும் பலனளிக்கும்.
அதேப்போல தற்போது கர்ப்பிணிகள் பலருக்கும் கர்ப்ப காலம் முதலே சளி பிடிப்பது வழக்கமாகி உள்ளது. குளிர் தன்மை கொண்ட பழங்கள், குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது சளித் தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு... அடுத்த இதழில்