ஒரே நிறம், பல நிறங்கள், கல் பதித்தது, கை வேலை என பல்வேறு வகைப் பட்டுப் புடவைகள் எல்லாம் எடுத்தாகிவிட்டது. தற்போது தீபாவளிக்கு என்னதான் எடுப்பது என்று மண்டை காய்ந்து போய் இருக்கும் பெண்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.ஆம், சென்னை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஒலிக்கும், ஒளிக்கும் நவீன பட்டுச்சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்க விழா மற்றும் நவீன வடிவமைப்புகள் கொண்ட சேலைகளின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அங்கு சென்று பார்த்தபோது சட்டென நமக்கு தோன்றியது ஒன்றுதான், இந்த தீபாவளி பெண்கள் அனைவருக்கும் பட்டு தீபாவளிதான் என்று.அந்த அளவிற்கு புதிய நவீன வகைகளில் அழகிய நிறங்களில் சுமார் 1,500 புதிய ரக சேலைகளை கோ ஆப்டெக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. தீபாவளிக்கு என்று தீபங்கள் போட்ட பட்டுச்சேலைததான் அதில் முதல் இடம் என்று நாம் மலைத்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்தபடியாக இந்த ஆண்டு தீபாவளிக்கு என்று வண்ண, வண்ண மின்மினி விளக்குகளுடன், இசையை எழுப்பும் வண்ணப் பட்டுச் சேலை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
அதைப் பார்த்ததும் அப்போதே நம் காதுகளில் பட்டாசுகள் வெடித்த சத்தம் கேட்டன. அதற்கு ஒலி-ஒளி சேலை என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சேலையின் முந்தானை மற்றும் பார்டர்களில் மின்மினி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்மினி விளக்குகள் மட்டும் கொண்ட சேலைகளும், மின்மினி விளக்குகள் மற்றும் இசையை எழுப்பும் கருவி பொருத்திய சேலை என 2 வகையாக சேலைகளை வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
சும்மா இருப்போமா நாம், அந்த சேலையைப் பற்றி விசாரித்தோம். அதில் தெரிந்த விஷயங்களை உங்களிடம் சொல்லுகிறேன். ஆனால் அதை யாரிடமும் கூறி விடாதீர்கள். முதலில் நீங்கள் போய் எடுத்து கட்டிக் கொண்டு மற்றவர்களை அசத்துங்கள். என்ன நல்ல ஐடியாதானே.
இந்த புடவை பேட்டரியால் இயங்கும் தன்மை கொண்டது. மின்மினி விளக்கும், இசையும் தேவையில்லாத நேரத்தில் பேட்டிரியை எடுத்து விடலாம். மேலும் சேலையை சலவை செய்யும் போதும் பேட்டரியை எடுத்துவிடலாம். இந்த சேலையின் விலை வெறும் ரூ.4,500 தான். இந்த பட்டுச்சேலையை கட்டிச்சென்றால் இருட்டில் சென்றாலும் ஜொலிக்கலாம்.
கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி ஜனவரி 31-ந் தேதி வரை பருத்தி மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், ஆயத்த ஆடைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.