கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கூத்து வேறு எங்கும் நடக்காது. அம்மாநில வாக்காளப் பெருமக்கள் ஏற்கெனவே எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ள நிலையில், அவர்களை மேலும் ஒரு குழப்பம் வந்து சூழ்ந்துள்ளது. அதாவது, யார் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் என்று தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். ஆம், இதுதான் தற்போதைய கர்நாடக அரசியல் நிலைமை.
கர்நாடக மக்களுக்கு வேட்பாளர்களின் முகம் மட்டுமே தேரியுமே தவிர, அவர்கள் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாது. காரணம், ''ஆபரேசன் லோட்டஸ்'' அல்லது அது போன்ற பல்வேறு வழிகளில் ஏராளமான அரசியல்வாதிகள் கட்சி மாறிவிட்டனர்.
காங்கிரஸில் இருந்துகொண்டு பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று மூச்சுக்கு முந்நூறு முறை திட்டியவர்கள் பலரும், திடீரென்று பா.ஜ.க.வைப் போற்றி அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்பு பா.ஜ.க.விற்குச் சென்ற காங்கிரஸார் சிலர், தற்போது அக்கட்சியை மதவாதக் கட்சி என்று உணர்ந்து மீண்டும் தாய் வீடான காங்கிரஸிற்கே திரும்பியுள்ள காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
இவ்வாறு அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ள காங்கிரஸ் தலைவர் டி.பி. சந்திர கெளடா. கடந்த 1975இல் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு 1977இல் வட இந்தியாவில் காங்கிரஸிற்குப் பேரடி விழும் சூழல் ஏற்பட்டபோது, இந்திரா காந்தி எளிதாக வெற்றிபெறும் வகையில் 1978இல் தனது சிக்மகளூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் இரயில்வே அமைச்சருமான சி.கே. ஜாஃபர் ஷெரீஃப்பிற்கு எதிராக பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. நிறுத்தவுள்ளது.
சந்திர கெளடாவுடன் பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு காங்கிரஸ் தலைவர் எல். ஆர். சிவராம கெளடா மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் பெற்றுள்ளார். இந்தத் தொகுதி எம்.பி.யான கன்னட நடிகரும் மத்திய அமைச்சருமான காங்கிரஸ் தலைவர் எம்.ஹெச். அம்பரீசை வீழ்த்தவே இந்தப் போட்டி.
இதேபோல வடக்கு கர்நாடகத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவரும் பிடர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான குருபடப்பா நக்மார்ப்பள்ளியையும் பா.ஜ.க. இழுத்துள்ளது. இவர் பிடர் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் என். தரம் சிங்கை எதிர்த்து நிற்கவுள்ளார்.
கன்னட நடிகரும் நிலத் தரகருமான சி.பி. யோகேஸ்வர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். இவர் பெங்களூரூ புறநகர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான ஹெச்.டி. குமாரசாமி, தற்போதை காங்கிரஸ் எம்.பி. தேஜஸ்வினி கெளடா ஆகியோரை எதிர்த்துக் களமிறங்குகிறார்.
சந்திர கெளடா, சிவராம கெளடா, யோகேஸ்வர் ஆகியோர் அரசியல் பலம் வாய்ந்த ஒக்கலிகா சமூகத்தினர் என்பதால் அவர்களைப் பா.ஜ.க. மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. பா.ஜ.க.விற்கு ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் தேவை என்பதும், மற்றொரு பலமிக்க சமூகமான லிங்கையாட் சமூகத்தில் பா.ஜ.க.விற்கு போதுமான ஆதரவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகியுள்ள பிரபல காங்கிரஸ் தலைவர் வி. சோமன்னாவையும் பா.ஜ.க. வரவேற்றுள்ளது.
கர்நாடகாவில் முதல் கட்டமாக எப்ரல் 23ஆம் தேதி 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மீதமுள்ள 11 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி அக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.
சலைக்காத காங்கிரஸ்!
எதிர் முகாமைக் கலைப்பதில் தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில், 2004 தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆணையர் ஹெச்.டி. சங்லியானா காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர் தற்போது தொகுதி மறு சீரமைப்பிற்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்குகிறார்.
இதேபோல காங்கிரஸில் இருந்து முதலில் பா.ஜ.க.விற்கும் பின்னர் சமாஜ்வாடிக் கட்சிக்கும் சென்ற முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பாவை காங்கிரஸ் கட்சி திரும்ப வரவேற்றுள்ளது. அவர் தனது சொந்த மாவட்டமான ஷிமோகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகனும் பா.ஜ.க. வேட்பாளருமான பி.ஒய். ராகவேந்திராவிற்கு எதிராகப் போட்டியிடுகிறார்.