Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞரின் இன்னொரு டைரி...

Advertiesment
கலைஞரின் இன்னொரு டைரி...
, வியாழன், 12 மார்ச் 2009 (18:11 IST)
நமது முதல்வர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வெளியே சொல்லக் கூடாத தனது தனிப்பட்ட நாட் குறிப்புகளை தற்போது ப‌கிரங்கமாக பத்திரிக்கைகளுக்கு அளித்து, அவற்றை வெளியிடச் செய்து வருகிறார். தொடர் கதை போல் தினமும் வெளியாகும் அவரது டைரிக்கு 'பாசக் கிளிகள்', 'உளியின் ஓசை'யைப் போல் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு(?).

இதைக் கருத்தில் கொண்டு அவரது இன்னொரு (கற்பனை) டைரியைத் தேடிக் கண்டுபிடித்து உங்களுக்காக வெளியிடுகிறோம். (ரகசியம் கருதி தேதியை மட்டும் குறிப்பிடவில்லை.)

திங்கள்: அரசுப் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவில் 11.55 மணிக்கு உறங்கச் சென்ற நான், வேலைப்பளுவைக் கருதி 12.10 மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். கடும் முதுவலி ஒருபுறமும் கூட்டணிக் குழப்பத் தலைவலிகள் மறுபுறமும் இருந்தாலும் கூட, என் அறிக்கையை வெளியிடாத சில பத்திரிகைகளைத் திட்டித் தீர்த்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினேன்.

காலையில் தயாளு கொடுத்த ஓட்ஸ் கஞ்சியை சாப்பிட்டேன். அது சீரணமாகாததால் 11 மணிக்கு ராஜாத்தி அளித்த கஷாயம் சாப்பிட்டேன். 3 மணிக்கு கனிமொழி எனக்கு போன் செய்து, என்னைப் பாராட்டி கவியரங்கம் நடத்தட்டுமா என்று கேட்டார். தன்னடக்கத்தோடு நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

செவ்வாய்: இன்று, இலங்கை விவகாரத்தில் ஒன்றுபட்டு நின்ற வழக்கறிஞர்களை பிரித்தாள நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓரளவு பலனளிக்கத் தொடங்கின. திமுக வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பியதாக ஏடுகளில் வெளியான செய்தியும் மதிமுகவில் இருந்து கண்ணப்பன் வெளியேறிய தகவலும் தேனோடு தினைமாவினைக் கலந்துண்ட மகிழ்வைத் தந்தன.

மதியம் எனதருமைத் தம்பி நடிகர் மாதவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது நடிப்பில் வெளியான 'யாவரும் நலம்' படத்தை, முதுகுவலியையும் பொருட்படுத்தாமல், அவர்களுக்காக வேதனையுடன் கண்டுகளித்தேன்.

புதன்: இன்று காலை ஹாமில்டன்னில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நண்பர் சேவாக் அதிரடியாக சதம் அடித்தது கண்டு நான் பூரித்துப் போனேன். எனது இளவல் தோனி தலைமையிலான அணியைப் போல் அன்னை சோனியா தலைமையிலான கூட்டணியும் வரும் தேர்தலில் வெற்றி காண வேண்டும் என்று முரசொலிக்கு கடிதம் எழுதினேன்.

பிற்பகலில் ஹோலி வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் என்னைச் சந்தித்தனர். ஆர்வ மிகுதியில் சிலர் என் மீது சாயம் பூசியது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், முகத்திற்கு நேரே கறுஞ்சாயத்தைப் பூசியது என்னவோ சங்கடத்தை ஏற்படுத்தியது.

வியாழன்: கடும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது என்னை சந்தித்து வாழ்த்து பெற வந்த எனதருமை புதல்வர் மண்ணின் மைந்தராம் திரு. அழகிரியை சந்தித்து மதுரை நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.

தோரணம் கட்டக் கூடாது, பணம் கொடுக்கக் கூடாது, வாக்குச் சாவடியைக் கைப்பற்றக் கூடாது, கள்ள ஓட்டு கூடாது என்று கழகத்தின் கொள்கைகளுக்கு மாறாக அடுக்கடுக்காக பல தடைகளை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விதித்து வருவதாக, அவர் என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

தி.மு. கழகத்திற்கு எதிராக தேர்தல் அதிகாரி செயல்படுவது கண்டு என் உள்ளம் கொதித்தாலும், நாகரீகம் கருதி கேள்வி-பதில் அறிக்கையில் அவரை திட்டி எழுதுவதைத் தவிர்த்தேன்.

அம்மையாரைத் தாக்கி கடிதம் எழுதி இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டபடியால், அவரை மீண்டும் கடும் சொற்களால் அருசித்து மடல் எழுதினேன். ஒரு வாரமாக இலங்கை விவகாரத்தை அரசியல் தலைவர்கள் கிளப்பாதது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

வெள்ளி: வழக்கம் போல் இன்று அதிகாலையிலேயே எழுந்த நான், எனது மேசையில் நாளிதழ்கள் இல்லாதது கண்டு உதவியாளர் சண்முகநாதனை அழைத்து காரணம் கேட்டேன். 2 மணிக்கெல்லாம் நாளிதழ் வராது என்று அவர் நினைவூட்டியபோது தான் என் வயோதிகத்தை நான் உணர்ந்தேன்.

பிற்பகலில், தயாளு கொடுத்த கீரை சாதத்தை சாப்பிடேன். ஏடுகளில் என்னைத் தாக்கி ஜெயலலிதா அம்மையார் விடுத்த அறிக்கைக்கு பதிலுரை எழுதத் தொடங்கினேன். இடையே நான் 'சன் செய்தி'களைப் பார்த்தபோது, அதில் ராமதாஸுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது கண்டு, முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் எனக்கு மேலும் மனவலி உண்டானது.

சனி: தேர்தலோ நெருங்கிக் கொண்டிருக்க, கூட்டணி விஷயத்தில் ராமதாஸ் இன்னமும் பிடிகொடுக்காமல் இருந்து வருவது, எனது அதிகாலைத் தூக்கத்தைக் கெடுத்தது. இதனால் சற்று கலக்கத்துடனேயே இன்றைய பொழுது புலர்ந்தது.

மக்களின் மனங்களை அறிய உளவுத்துறையினரைக் கொண்டு எடுக்கப்பட்ட சர்வே முடிவு வந்தது. அதில் தெரிவிக்கப்பட்ட தகவல், முதுகுவலிக்கு எனக்கு மருத்துவர்கள் தந்த மாத்திரைகளைவிடவும் கசப்பாக இருந்தது.

பிற்பகலில், சென்னை வந்த தலைமை தேர்தல் அதிகாரி என்னைச் சந்தித்தார். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி, கழகத்திற்கு பொருந்தாத கோரிக்கை ஒன்றையும் முன் வைத்தார். மொத்தத்தில் இன்றைய பொழுது எனக்கு எரிச்சலையே அதிகம் தந்தது.

ஞாயிறு: இன்றோ ஞாயிறுக் கிழமை- ஓய்வு நாள். ஆனால் எனக்கும் என் பேனாவிற்கும் ஓய்வென்பதே கிடையாது அல்லவா. இளைப்பாற வேண்டும் என்று கருதி உதிப்பதை நிறுத்தும் உரிமை சூரியனுக்கு உண்டா?

காலையில் தேர்தல் கூட்டணி குறித்து மக்களிடம் (அதாவது அழகிரி, ஸ்டாலின், தயாநிதி, கனிமொழி ஆகியோரிடம்) கருத்துக்களைப் பகிர்ந்திட்டேன். இடையிடையே சமோசாவையும் வடையையும் விரும்பி உண்டேன்.

பிற்பகலில் உறக்கம் வரவில்லை. அதனால் பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துப் பொருட்கள் பற்றி கேட்டேன்.

ஆனால், அவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான மருத்துகள் பற்றி கேட்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டு, மருந்துகள் சாப்பிடுவதை தற்போது நிறுத்திவிட்டதாகவும் நீங்கள் மருந்துகளை இன்னமும் எடுத்துக் கொள்கிறீர்களா என்று பதிலுக்கு என்னைக் கேட்டார். அடடா தூக்கத்தில் அவரை எழுப்பிவிட்டேன் என்பது பின்னர் தான் புரிந்தது.

மாலையில் தமிழினத் தலைவர் அருமை நண்பர் வீரமணியும் ஜெகத்ரட்சகனும் என்னைச் சந்தித்து, தங்களது பல்கலைக் கழகங்கள் சார்பில் முனைவர்ப் பட்டம் அளிக்கவுள்ள தகவலைத் தெரிவித்தனர்.

அன்றிரவே 'நோயாளிக்கு டாக்டர் பட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வாலி எனக்கு வாழ்த்துக் கவிதை வரைந்திருந்தார். அதை அகமகிழ்ந்து படித்து, பூரித்தபடி முதுகுவலிக்கு மத்தியிலும் கண்ணயர்ந்தேன்.

Share this Story:

Follow Webdunia tamil