மணவாழ்க்கை அமைதியாக நடைபெற வேண்டுமானால் மனைவியின் பேச்சை கேட்டு அதற்கு தலையாட்டி நடக்க வேண்டும் என்று கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
மனைவியின் சொல்லே மந்திரம் என்றும், மனைவியின் பேச்சைக் கேட்டு நட என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்த உண்மையான தத்துவம் இப்போது முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தின் மூலம் கூறப்பட்டுள்ளது.
சண்டிகாரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றப் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.
ஆனால், விவாகரத்துக்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் தீபக் மேல்முறையீடு செய்தார். அதன்படி, சட்டபூர்வமான பிரிவை உயர்நீதிமன்றம் அளித்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மனீஷா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, விவாகரத்து அளித்ததோடு மனீஷாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டது.
விவாகரத்து உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மனீஷா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தான் மேற்கண்ட அறிவுரையை நீதிபதிகள் வழங்கினர்.
விசாரணையில் குறுக்கிட்டு நீதிபதிகள் கூறுகையில், `உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாரோ, அதை கேளுங்கள். அப்படி கேட்காவிட்டால் அதன் தொடர் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நாம் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் தான். உங்கள் முகத்தை அந்த பக்கம் திருப்புமாறு மனைவி கூறினால் அந்த பக்கம் திருப்ப வேண்டும். இந்த பக்கம் திருப்ப சொன்னால் இந்த பக்கம் திருப்ப வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணையை ஜுலை கடைசி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அப்போதும் நீதிபதிகள் ஒரு கருத்தை வெளியிட்டனர். அதாவது, `17 ஆண்டுகள் பொறுத்து இருந்த நீங்கள் இருவரும் இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்' என்று தெரிவித்தனர்.