என்ன சொல்வது என்று தெரியாமல் எதையோ சொல்லிவிட்டார்கள் என்று எண்ண வேண்டாம். இது முற்றிலும் உண்மையான விஷயம்தான்.
பூமியில் வெப்பம் அதிகரிப்பதற்கு விவாகரத்தும் ஒரு காரணமாக உள்ளது. எனவே விவாகரத்து செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங், கேன்பெராவில் நேற்று நடந்த செனட் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அதாவது, பூமியில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளபோதும், விவாகரத்துக்கள் அதிகரிப்பதும் ஒரு முக்கிய காரணம்.
ஏனெனில், தம்பதிகள் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் இருக்கும்போது, சமைப்பது, எரிசக்தி, தண்ணீர் செலவு எல்லாம் ஒரு வீட்டுக்கான தேவையின் அளவிலேயே இருக்கும்.
ஆனால், அவர்கள் சண்டையிட்டு விவாகரத்து பெற்றுவிட்டால், ஒரு குழந்தையுடன் தாய் ஒரு வீட்டிலும், தனியாகவோ அல்லது ஒரு குழந்தையுடனோ தந்தை மற்றொரு வீட்டிலும் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் தனித்தனியாக சமைக்கும்போது எரிசக்தி, மின்சாரம், தண்ணீர் என எல்லாமே பயன்பாட்டின் அளவில் இரண்டு மடங்காக ஆகிறது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து தேவைகளும் அதிகரிக்கின்றன.
எனவே தம்பதிகள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் போது இவற்றில் பல மிச்சம் செய்யப்படுகின்றன.
விவாகரத்துக்கள் அதிகரிப்பதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மட்டுமின்றி, பூமி வெப்பமயமாதலுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.
எனவேதான் தம்பதிகள் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்றும், விவாகரத்து வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
மேலும் அவர் பேசுகையில், அமெரிக்க சுற்றுப்புறச்சூழல் அதிகாரிகளும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர். தம்பதியர் இடையே விவாகரத்து உருவாகாமல் தடுத்தால் நாட்டுக்கு இவ்விரு வழிகளிலும் நன்மை ஏற்படும். இதை அரசு துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் விவாகரத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டீவ் பீல்டிங் தெரிவித்தார்.
அதனால்தான், ஸ்டீவ் பீல்டிங் பல ஆண்டுகளாக குடும்ப ஒற்றுமை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவரது குடும்பம் மிகப்பெரியது. கூட்டுக் குடும்பத்தில் 16 குழந்தைகளில் ஒன்றாக இவர் வளர்ந்துள்ளார். ஸ்டீவ் பீல்டிங் கருத்து சரியானதுதான் என பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.