Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வான்கோவின் காது!

-மோவாசிர் ஜெய்மி ஸ்க்ளையர்

வான்கோவின் காது!
, சனி, 12 ஏப்ரல் 2008 (15:19 IST)
[மோவாசிரஜெய்மி ஸ்க்ளையர் (Moacyr Jaime Scliar) இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மருத்துவர். யூத சமயத்தைச் சேர்ந்தவர். பிரேசிலில் ஒரு யூதனாக இருப்பதைப் பற்றி இவரது கதைகள் பேசத் தவறியதில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஆனாலஇந்தககதநகைச்சுவைக்குமஅபத்தசசுவைக்குமஇடைப்பட்ஒரஉணர்வஎற்படுத்தக்கூடியது.]

***

நாங்கள், வழக்கம்போல் சீரழிவின் எல்லையிலிருந்தோம். என் தந்தை, சிறு மளிகைக் கடை முதலாளி. அவருக்கு சரக்கு சப்ளை செய்த ஒருவருக்கு எக்கச்சக்கமாக பணம் பாக்கி வைத்திருந்தார். கடனை அடைக்க வழி எதுவும் இல்லை.

ஆனால் தந்தையிடம் பணத்திற்கு குறையிருந்தாலும் கற்பனைக்கு பஞ்சமில்லை, அவர் ஒரு உற்சாக மனோநிலையுடன் கூடிய புத்தி கூர்மையுள்ள பண்பட்டவர். அவர் பள்ளியை முடித்திருக்கவில்லை. ஒரு எளிய மளிகைக் கடையில் விதி அவரை முடக்கிப் போட்டது. இங்கு பிற இறைச்சிகளுடன் மற்றும் பன்றி இறைச்சிகளிடையே இருப்பின் தாக்குதல்களை தைரியத்துடன் எதிர் தாக்குதல் செய்தார். வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து, அதைத் திருப்பிக் கேட்காததால் என் தந்தை மீது அவர்களுக்கு எப்போதுமே ப்ரீதி. ஆனால் இவருக்கு சரக்கு சப்ளை செய்பவர்களிடம் இது வேறு கதை. மன உறுதி மிக்க அந்த கனவான்கள், பணத்தை திரும்பிப் பெற விரும்பினர்.

அப்படி என் தந்தைக்கு கடன் கொடுத்த ஒருவர் இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யமற்றவர் என்பது ஊர் அறிந்தது.

வேறு யாராவதாக இருந்தால் விரக்திக்கு விரட்டியடிக்கப் பட்டிருப்பார்கள். வேறு சிலரோ தலைமறைவாக செல்ல உத்தேசம் பூண்டிருப்பர் அல்லது தற்கொலை கூட செய்து கொண்டிருப்பர். என் தந்தை அப்படி அல்ல. எப்போதுமே தன்னம்பிக்கையான என் தந்தை, அந்த தயவு தாட்சண்யமற்ற கடன்காரரிடமிருந்து விடுபட வழி இருப்பதாகவே நம்பினார். அந்தக் கடன்காரருக்கு பலவீனம் ஏதாவது இருக்க வேண்டும் அதை வைத்துதான் அவரை நாம் பிடிக்கப் போகிறோம் என்று கூட என் தந்தை கூறுவார். அங்குமிங்கும் அக்கம் பக்க விசாரணை மேற்கொண்ட என் தந்தை வளமான நம்பிக்கையுள்ள ஒன்றை தோண்டி கண்டுபிடித்தார்.

தோற்றத்தில் முரட்டுத்தனமான, உணர்ச்சியற்ற மனிதனான அந்தக் கடன்காரருக்கு வான்கோ மீது ரகசிய காதல் இருந்து வந்தது. மிகப்பெரிய அந்த ஓவியரின் மறு படைப்புகள் கடன்காரரின் வீட்டை முழுவதும் அலங்கரித்தன. கிர்க் டக்ளஸ் நாயகனாக நடித்த வான்கோவின் துன்பமான வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை அவர் குறைந்தது அரை டஜன் முறைகளாவது பார்த்திருந்தார்.

நூலகத்திலிருந்து வான்கோவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றை வாங்கி வந்த தந்தை வார இறுதியில் அந்தப் புத்தகத்தில் மூழ்கினார். பிறகு ஞாயிறு மாலையில் அவருடைய படுக்கையறைக் கதவு திறந்தது என் தந்தை வெற்றிக் களிப்புடன் அதிலிருந்து தோன்றினார்.

கண்டுபிடித்து விட்டேன்"!"

ஓரமாக என்னை அழைத்துச் சென்று - பனிரெண்டு வயதில் நான் தான் அவருக்கு பாங்கனும் கையாளும் - கண்கள் மினுமினுக்க கிசுகிசுத்தார் :

"வான்கோவின் காது. காது நம்மை காப்பாற்றும்"

"என்ன அங்க ரெண்டு பேரும் கிசுகிசுன்னு!" அம்மா கேட்டாள்.

என் அப்பாவின் அவள் கூறும் "தகிடுதத்தங்களை" அவள் சகித்துக் கொள்வதில்லை.

"ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை" என்றார் தந்தை, பிறகு குரலைத் தாழ்த்தி என்னிடம் "பின்னால் விளக்குகிறேன்" என்றார்.

பைத்தியக் கணத்தின் உச்ச நிலையில் வான்கோ தன் காதை அறுத்து காதலிக்கு அனுப்பி வைத்த கதையை என்னிடம் கூறினார் தந்தை. இந்த உண்மை அவரை ஒரு திட்டம் வகுக்கத் தூண்டியது. அதாவது வான்கோவை காதலித்த அந்தப் பெண் காதல் வயப்பட்ட என் தந்தையின் பாட்டனார் வான்கோவின் அறுபட்ட பதனப்படுத்தப்பட்ட காதை மரபுரிமையாக என் தந்தையிடம் ஒப்படைத்திருக்கிறார், கடன்காரரிடம் வான்கோவின் காதை கொடுத்துவிட வேண்டியதுதான் பதிலாக என் தந்தையின் கடனை அவர் நீக்கிவிடுவதோடு, கூடுதலாக கடன்களையும் அளிப்பார். இதுதான் தந்தையின் திட்டம்.

"நீ என்ன நினைக்கிற?"

அம்மா சொல்வது சரிதான் : அவர் வேறு ஒரு கற்பனையான உலகத்தில் வாழ்கிறார், இருப்பினும் அவரது யோசனையின் அபத்தம் அல்ல முக்கியப் பிரச்சினை, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எங்களுடைய நிலைமைதான் காரணம்.

"ஆனால் காதிற்கு எங்கே போவது?"

"காது?" இது அவரது மூளையில் உதிக்கவேயில்லை என்பது போல என் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

"ஆமாம்" வான்கோவின் காது, உலகத்தின் எந்த மூளையிலிருந்து உனக்கு அது கிடைக்கப் போகிறது?" என்றேன் நான்.

"ஹ", பிரச்சினையே இல்லை. பிணவறையிலிருந்து நமக்கு அது கிடைக்கும், என் நண்பன் ஒருவன் அங்கு வாயிற் காவலனாக இருக்கிறான், எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவர் புறப்பட்டார். முற்பகலில் ஒளிப்பிழம்பாகத் திரும்பிய அவர், தன் கையிலிருந்த பார்சலை கவனமாக பிரிக்கத் தொடங்கினார். அது ஒரு பதனக்காப்புக் குடுவை, அதில் கருப்பான, விளக்க முடியாத வடிவத்தில் ஒன்று இருந்தது. என் தந்தை வெற்றிக்களிப்புத் தோரணையுடன் வான்கோவின் காது என்று அறிவித்தார்.

இல்லை என்று எவர் கூற முடியும்? இருப்பினும் எதற்கும் இருக்கட்டும் என்று குடுவையின் மீது "வான்கோ - காது" என்ற பட்டியை ஒட்டி வைத்தார்.

மதியம் கடன்காரர் வீட்டுக்கு இருவரும் புறப்பட்டோம். தந்தை அவர் வீட்டினுள் சென்றார், நான் வெளியே காத்திருந்தேன் ஐந்து நிமிடம் கழித்து அலங்கோலமாக மட்டுமல்லாது உண்மையில் கடுஞ்சீற்றத்துடன் தந்தை வெளியே வந்தார். கடன்காரர் என் தந்தையின் செய்கையை நிராகரித்ததோடு நிற்காமல் குடுவையைப் பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியவும் செய்திருந்தார்.

"மரியாதை கெட்டத்தனம்!"

நடந்தவை தவிர்க்க முடியாதது என நான் சிந்தித்த போதிலும் அவரது கோபத்திற்கு நான் உடன்பட்டேன். "மரியாதை கெட்டத்தனம்" "மரியாதை கெட்டத்தனம்" என்று சதா தந்தை முணுமுணுத்தவண்ணம் நாங்கள் அமைதியான அந்தத் தெருவில் நடக்கத் தொடங்கினோம்.

பாதி நடையில் சிலை போல் நின்ற அவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் :

"அது வலதா அல்லது இடதா?"

என்ன கேட்கிறார் என்று புரியாமல் "என்ன?" என்றேன்.

"வான்கோ அறுத்துக் கொண்ட காது. அது வலது காதா இடது காதா?" இந்த அனைத்து நடைமுறைகளிலும் எரிச்சலடைந்தவனாக, "எனக்கு எப்படி தெரியும்?" உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும், நீதான் புத்தகத்தை படிச்ச?"

"ஆனா தெரியலை" என்று துயரமிக்க குரலில் அவர் கூறினார், எனக்குத் தெரியவில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன்"

நாங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு அமைதியாக நின்றோம். அப்போது என்னை நச்சரித்து வந்த ஒரு சந்தேகத்தினால் நான் தாக்கப்பட்டேன், சந்தேகத்தை வெளிப்படுத்தும் தைரியம் எனக்கில்லை, ஏனெனில் அதன் விடை எனது சிறுபிராயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று எனக்குத் தெரியும். எனினும் :

"குடுவையில் இருப்பது வலது காதா, இடது காதா?" என்று கேட்டேன்.

வாயடைத்துப் போனவராக அவர் என்னைப் பார்த்தார்.

"உனக்கு தெரியுமா? எனக்கு சுத்தமா தெரியல" என்று பலவீனமான குரலில் அவர் கிசுகிசுத்தார்"

பிறகு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கி நடை போடத் துவங்கினோம், ஒரு காதை, நீங்கள் கவனமாக ஆராய்ந்தீர்களானால் - எந்த காதாயிருந்தாலும், அது வான்கோவினுடையதோ அல்லது இல்லையோ - காது கிருக்கு மறுக்கான பல்வழி அமைப்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த கிருக்கு மறுக்கு அரும்புதிர் பாதையில் நான் தொலைந்து போனேன், அதிலிருந்து மீண்டு வெளியேற எனக்கு எப்போதும் வழி தெரிந்திருக்கவில்லை.

ஆங்கிலமவழி தமிழில்: ஆர்.முத்துக்குமார்.



Share this Story:

Follow Webdunia tamil