செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அதன் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி தெரிவித்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் இசை என்ற தலைப்பில் நடந்து வந்த பயிலரங்கத்தின் நிறைவு நாள் விழாவில் பெசிய ராமசாமி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவுபெறும்.
கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முந்தைய 41 தமிழ் நூல்களை ஒரே தொகுப்பாக வெளியிட உள்ளோம். அது பைபிள், குரான் போல தமிழர்கள் அனைவருடைய இல்லங்களிலும் இருக்க வேண்டும். இந்த 41 நூல்களையும் உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் மட்டும் 52 மொழிபெயர்ப்புகள் உள்ளன. அதில் சிறந்த 18 மொழிபெயர்ப்புகளை தொகுப்பாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் அது மத்திய அரசின் பாரம்பரிய சொத்தாகி உள்ளது. தமிழின் வளர்ச்சிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இதன் மூலம் தமிழை வளர்க்க நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. செம்மொழி நிறுவனம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு பயிலரங்கங்களை நடத்தி வருகிறோம். பத்திரிகையாளர்களுக்கும் பயிலரங்கம் நடத்தத் தயாராக உள்ளோம்.
இதுபோன்ற தமிழ்ப் பணிகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.
விழாவில் பேசிய சீர்காழி சிவசிதம்பரம், ஒரு ரூபாய் கிடைத்தாலும், ஒரு லட்சம் கிடைத்தாலும், ஒருவர் இருந்தாலும் ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்தாலும் ஒரே மாதிரி பாடுபவன்தான் கலைஞன். வளரும் கலைஞர்களுக்கு தளர்வு இருக்கக் கூடாது. இன்று தமிழிசைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
இசைக்கு ஜாதி, மத, இன வேறுபாடுகள் இல்லை. ஆனால் மூத்த இசையான தமிழ் இசையை வளர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மரபு இசையை வளர்க்க நாம் போட்டியை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
செம்மொழி அந்தஸ்து தமிழுக்குக் கிடைத்த கற்பக விருட்சம். அதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழை வளர்க்க வேண்டும் என்றார் சீர்காழி சிவசிதம்பரம்.