Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் மொழிப் போலிகள் - தொட‌ர்‌ச்‌சி

ஆர்.முத்துக்குமார்

Advertiesment
உடல் மொழிப் போலிகள் - தொட‌ர்‌ச்‌சி
, செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (10:56 IST)
உட‌ல் மொ‌ழி‌ப் போ‌லிக‌ள் க‌ட்டுரை‌யி‌ன் தொட‌ர்‌ச்‌சி

அது பெண் விடுதலையா என்பதே கேள்வி: "பெண்ணுக்கென்று அதிகாரம் கொண்ட தனது இனப்பெருக்கத் தொடர்ச்சியை அவள் கையகப்படுத்தவேண்டும். இதன் மூலம் அவள் சமூகத்தை கையகப்படுத்த முடியும். இது ஒரு அரசியல் செயல்பாடு மட்டுமல்ல கலாச்சார செயல்பாடு"

உயிரியல் விதியான (biological destiny) மாதவிடாய், கருத்தரித்தல் ஆகியவற்றின் இயற்கை செயல்பாடுகள் எவ்வாறு கலாச்சார செயல்பாடுகளாகும் என்பதை மாலதி மைத்ரி விளக்குவாரா? இந்த இனப்பெருக்கம் "பெண்ணுக்கென்று அதிகாரம்" கொண்டதாக எப்படி இருக்கும். பெண்ணுக்கான உடலியல் விதியல்லவா இது. இதில் அவள் கையகப்படுத்த என்ன இருக்கிறது. மிக மோசமான கருத்தை மோசமான மொழியில் மாலதி மைத்ரி கொடுக்கிறார். என்றைக்கும் எப்போதும் தகர்க்க முடியாததாக (வேண்டுமானால் ஒத்திபோடக்கூடிய)கட்டமைக்கப்பட்டுள்ள இருபாலுறவு, குடும்பம் போன்ற கருத்துருவங்களுக்கு ஒரு பாரம்பரிய, சம்பிரதாயவாத ஆண் கூட இவ்வற்று விளக்கமளிக்க முடியாது.

உலகம் தோன்றியது முதல் உயிரிகள் மனிதர்கள் இனப்பெருக்க தொடர்ச்சியைத் தவிற வேறு என்னதான் செய்து விட்டனர்? மனித குலம் (இது மனுஷிகள் குலமும்தான்) செய்துவரும் இனப்பெருக்கத்தொடர்ச்சியின் சீரழிவுகளையும்தான் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோமே. இது என்ன பெரிய புரட்சிகர செயல்பாடு? ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வின் படி 'Castration Complex' மற்றும் Penis envy போன்ற உளச்சிக்கல்களால், தனது ஆண்குறியின்மையை கடந்து செல்ல, தாயின் மீதான பாலியல் இச்சை முதலீட்டை தந்தை மீதான பாலியல் இச்சை முதலீடாக மாற்றும் பெண் இருபாலுறவின் இன்றியமையாத விளைவான சிசுவை, இழந்த ஆண்குறியாக வரிந்து பதிலி நிறைவேற்றம் அடைகிறாள். ஃபிராய்டின் இந்த கருத்துகளை தீவிரப் பெண்ணியக் கோட்பாட்டாளர்கள் ஒரு ஆணிய கருத்தியலாக கடும் தாக்குதல் தொடுத்தனர். மேலும் ஆண்குறி மீதான பொறாமை என்பதற்கு பதிலாக பெண்குறி மீதான ஆணின் பொறாமை என்றெல்லாம் எதிர் கருத்தியல்களை ஒரு விவாதத்திற்காக எழுப்பத் துவங்கினர்.

சமூக பண்பாட்டுத் தளத்தில் உயிரியல் மறு உற்பத்திகள் என்ற அடிப்படையிலேயே சமூக பண்பாட்டு மேல்கட்டுமானம் கட்டமைக்கப்படுகிறது. மார்க்சீயம் முதல் தகர்ப்பு விமர்சனம் வரை மறு உற்பத்திகளை கட்டமைத்து காத்து வரும் நிறுவனங்களை கடுமையாக தாக்கி எழுதி வருகின்றன.

சமூகவியலாளர் பியர் பூர்டியோ கருத்துப்படி மறு உற்பத்திகள் ஏற்கனவே உள்ள ஆதிக்க பண்பாட்டு வடிவங்களை பாதுகாத்து நிரந்தரமாக்குவதாகும். இவ்வளவு தாக்குதலுக்குள்ளான பழமைவாதக் கருத்தியலை அசட்டுத் துணிச்சலுடன் பெண்ணியக் கோட்பாடாக மாலதி மைத்ரி எடுத்து வைக்கிறார் என்றால். நம் தமிழ் சிறு பத்திரிகா சூழலின் ஒரி மந்தத் தன்மையே காரணம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கோட்பாடு என்ற பெயரில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கெல்லாம் எந்த வித சவாலையும் ஏற்படுத்தாமல் மழுங்கி வருவதைத்தான் இது காட்டுகிறது. நமக்கு தங்கர் பச்சான், சேரன், கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் சிவாஜி படத்திற்கு குறிப்புக் குப்பை விமர்சனம் எழுதத்தான் நேரமிருக்கிறது.

மாலதி மைத்ரி கூறுவதை பெண்ணியக் கோட்பாடாக ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? பின் அமைப்புவாத தகர்ப்பு விமர்சகர் சூசன் ஃபெல்மான் கூற்றின்படி இதனையும் இதனையொத்த பிற குரல்களையும், "Ventriloquist Dummies of Male voice" என்று கூறலாம். பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைக்கு முன்னுரை எழுத ஆண் கவி/விமர்சகர்களை நம்பியிருப்பது போல் சுய முன்னுரை எழுதும் மாலதி மைத்ரியும் ஆண் கருத்தியலையே பெண்ணியக் கோட்பாடாக திரிபு செய்கிறார். இவரது பெண்ணியம் ஒரு திரிபுவாத பெண்ணியம் (Revisionist feminism).

முன்னுரை என்பதற்கு ஹெகல் அதிக முக்கியத்துவமும் பொறுப்பும் அளிக்கின்றார். ஆனால் தகர்ப்பு விமர்சகரான தெரிதா முன்னுரைக்கும் செயல்பாட்டை கீழ் வருமாறு எள்ளுகிறார்:

"...the preface falls like an empty husk, a moment of dryness or loquacity, sometimes both at once." (Dissemination, p.9)


முன்னுரை என்பது "சப்புச்சவறு", பயனற்ற வீண்பொருள், வறட்டுத்தனத்தின் ஒரு கணம், வீண் சலசலப்பு இவையே டெரிடா கொடுக்கும் படிமம். ஆனால் படைப்பு என்ற சுய உருவாக்கச் செயல்பாட்டை மெதுவே அசைபோட்டு, அதனை எதிர் ஒளிர்விக்கும் கருத்தாக்கச் சிந்தனையைக் கட்டமைக்கும் ஒரு பொறுப்பான செயல்பாடும் முன்னுரைக்கு உண்டு. முன்னுரை பற்றிய தெரிதாவின் கருத்தை ஓரளவிற்கு எனது "கோணங்கியின் சூட்சுமப் பதிவுகள்" என்ற கட்டுரையில் காண்பிக்க முயற்சி செய்துள்ளேன்.

பெண் வித்தியாசம், பெண் உடல் மொழி, பாலியல் அரசியல் பெண் உடல் எழுத்து போன்ற சுய நியமன கூப்பாடு பெண் விடுதலைக் கருத்தாக்கங்கள் அது முளைத்த மண்ணிலேயே கேள்விக்குட்படுத்தப்பட்டு பரிமாணங்கள் மாறி வேறு திசையில் பயணப்பட்டுக் கொண்டிருகிறது. அங்குமே பெண் எழுத்துக்கள் பொதுவான வகையினங்களுக்குத் திரும்பி விட்டிருக்கும் வேளையில், சாமியின் துணையுடந்தான் அக்ரஹார ஐயர் சேரிக்குள் வருகிறான் என்ற ஞானக்கூத்தனின் கவிதைக்கேற்ப செத்த கருத்துடலைச் சுமந்து மீண்டும் ஆண்களின் தெருக்களில் வலம் வரும் பெண்ணிய முன் அனுமானங்களையும், பெண்ணியப்பாடையைச் சுமப்பவர்கள் பாடைக்குக் கீழ் முனைக்கு முனை எட்டி உதைக்கும் விமர்சன நாயை வெளிக் கொணரவும் சில கேள்விகளை முன்வைப்போம்:

1. உடல் என்பது பண்பாட்டு பேதங்களால் பாலியல் இருமைகளாக கட்டமைக்கப்படுகிறது எனில் "ஆண் விஞ்ஞானம்(?), ஆண் தத்துவம்(?) புராணம், ஆகியவை உடலை அடக்கி ஒடுக்கியுள்ளது எனில் பெண் உடல் மட்டுமல்ல ஆணின் உடலும் அன்னியப்பட்டதே. "உடல் எனும் முது விலங்கு" இன்றைய ஆண் உடலாக, பெண் உடலாக வளர்ச்சியடைவதற்கு முன்பு இருந்த அத்தனை வடிவங்களும், அதன் உடற்கூறியல் பரிணாமங்களும் நாம் முழுதும் அறிந்தவர்களாவோமா?

2. கீழைத் தேய மற்றும் மேலைத் தேய தத்துவங்கள், புராணங்கள் தொன்மங்கள், மற்றும் சமூகவியல்கள் உள்ளிட்ட அனைத்துச் சொல்லாடல்களும் பெண் என்பவள் மற்றமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றால், எனில் இவர்கள் வெளிப்பாடுகளில் ஒரு பெண் எவ்வாறு அவளாகவே அவளுக்காக பேசுவதாக நம்புகிறாள்?

3. இந்தக் கவிதைகளில் பேசும் குரலின் அடையாளம் என்ன?

4.பெண் மற்றமையை, பெண் இழிவை, பெண் உடல் நசிவை இத்தொகுதிகளில் உறுதி செய்வது யாருடைய குரல்?

5.ஆணாதிக்க, அதிகார வர்க்க, சாதியச் சொல்லாடல்கள் பெண் உடலை பலிகடாவாக்குகிறது என்றும், பெண்களின் கருப்பையைப் போல் அவர்கள் பாலியலுக்கும் என்ன இருக்கிறது என்பதை "புரையோடிய ஆணிதக்கச் சமூகமே" தீர்மானிக்கிறது என்றால் குட்டி ரேவதியும், சுகிர்த ராணியும்,, சல்மாவும் எந்த கோட்ப்பாட்டுப் புள்ளியிலிருந்து எழுதுகின்றனர்?

6.இவர்கள் ஆண்களின் மொழியை பேசுகின்றனரா, அல்லது பெண்களின் மவுனத்தை பேசுகின்றனரா?

7.பெண்ணாகப் பேசுகிறார்களா? அல்லது மௌனமாகிய பெண்களின் இடத்தில் (அல்லது இடத்திற்காக)பேசுகிறார்களா? மவுனமாக்கப்பட்ட பெண்களுக்காக பேசுகிறேம் என்றால் அதிகார ஏணியில் அவர்களின் இடத்தை இவர்கள் அபகரிப்பதாகாதா? பெண்ணிற்காக பேசுகின்றனரா? அல்லது பெண்ணின் பெயரால் உபன்யாசம் செய்கின்றனரா?

8.பெண்ணாக இருப்பதே பெண் பற்றி பேச போதுமானதா?

9.பெண்ணாகப் பேசுவது உயிரியல் நிபந்தனையால் ஏற்பட்ட நிர்பந்தமா அல்லது விபத்தா? அல்லது உடலுறுப்பு, உடற்கூறியல் ஆகியவற்றால் ஏற்பட்ட தந்திரோபாய நிலைப்பாடா? ஃபிராய்ட் கூறுவது போல் anatomy is destiny என்பதை ஏற்றுக் கொண்டால்தான் உடல் மொழி என்று பேசமுடியும். அப்போது ஃபிராய்டியக் கூற்றையும், அதன் பண்பாட்டு வடிவங்களையும் எதிர்த்து போராடும் தேவையும் பெண் உலகிற்கு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதகாதா?

10. ஒரு பெண்ணாகப் பேசுவது இயல்பாக, நிஜமாக இயலாதெனின், எதன் அடிப்படையில் அது முழங்கும் உத்தரவாதங்களை ஏற்பது?

பொருளாதாரத் தளை, வரலாற்றுத் தளைலிருந்து உலகமாந்தர்களனைவரையும் விடுவிப்பதான கருத்தியல்களின் உபாசகர்களாய் தங்களை வரிந்து கொண்டு, சூழலின் நெருக்கடியின்றி, சிந்தனா தர்க்கப்போக்குகளின்ன் அறிவுசார் நெருக்கடுகளுமின்றி திடீரென வில்ஹெய்ம் ரெய்க் ரக தேகான்மவாத போலி கருத்தியலாளர்களாக வலம் வந்து, இன்னமும் சிக்கலும், குழப்பங்களும் தீராத, தீர்ந்தாலும் விளங்காத, எளிமையான வாசகங்களை சுலபமாக எடுக்கமுடியாத டெல்யூஸ்-கட்டாரி இரட்டையர்களின் "உறுப்புகளற்ற உடல்", "எந்திரம்","பெருந்திரள் அமைப்பு", "நுண் அணுத்திரள் அமைப்பு" ஆகியவை புரிந்து விட்டதாய் புருடா அர்த்தங்களை டெல்யூசிய விடுதலையாக நமக்கெல்லாம் ஆசீர்வதித்து, எல்லாம் முடிந்து விட்டதான நிலையில் தற்போது ஜென் பவுத்தம், புத்த பிக்குணிகள் என்று பெண் விடுதலைக் "கருத்தியலாளராக" பெண் துறவறம் பற்றிய 'மட' விடுதலைப் பிரசாதங்களை வழங்கி மாண்டூக்கியங்கள் பல மேற்கொண்ட, தமிழ் சிறுபத்திரிக்கை இரட்டையர்களான சவர்-உவர்களும், சொற்பொழிவு மண்டபங்களில் ஆங்காங்கே "மெடூசாவின் புன்னகையை" சிடுசிடுப்புடனும் கடுகடுப்புடனும் வெறும் தரையில் உதிர்த்து வரும் "ஹெலன் சிக்ஸீ" (நல்ல வேளை செக்ஸீ அல்ல)ரக பஞ்சாங்கங்களும், மேலும் சில பல பட்டடை பெண்ணிய ஆண்களும், "பெண் துரதிர்ஷ்டங்களை" பங்கிட்டுக் கொள்ளும் அதிர்ஷ்டம் பெண்ணியத்திற்கு ஆசிர்வதிக்கப்பட்ட பின் ஆணாதிக்கமாவது வெங்காயமாவது?


மேற்கண்ட கேள்விகளுக்கு விடைபகர்வதும் விடைகோர்வதும் இந்த கட்டுரையின் நோக்கமன்று. அல்தூசரின் கூறுவது போல் மேற்கூறிய கேள்விகள் ஏற்கனவே தயாராக உள்ள கருத்தியல் விடைகளை தூண்டும் கருத்தியல் கேள்விகள் அல்ல. மாறாக பெண்ணியம் பற்றிய விமர்சனக் கோட்பாட்டுக் கேள்விகள். இது போன்ற கேள்விகளை தன்னுளே எழுப்பாத, எழுப்பத் திராணியற்ற எந்தப் பெண்ணியமும் விடுதலைக்கான குரல்கள் ஆகா.

இயற்கையம்ச மழைக்குரல், லலித கலை அல்லாத வர்மக்கலை, உருவகக் கலை, எத்தனை கோடி இன்பம் வைத்தா இறைவா என்று புகழுரைக்கப்பட்ட மாலதி மைத்ரி, சுகிர்தராணி மற்றும் குட்டி ரேவதி ஆகியோரது கவிதைகளை ஓரளவிற்கு வாசித்து பார்த்ததில் எந்த ஒரு அறிவார்த்த ஆர்வத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது.


இக்கவிதைகள் மொழி நடையளவில் நொய்மையானவை, படிம அளவில் தர்க்க அடிப்படைகளற்று யூகிக்க முடிவதாய், அடிபட்டுப் போன வெற்று சொற்களாலான க்ளிஷே ரகத்தை சேர்ந்தவை. உணர்ச்சியளவில் நேர்மையற்றவை, சுய ஏக நிச்சயவாதம், தன் முனைப்பு, தற்காதல் என்ற மூடுண்ட திரைகளில் வீழ்ந்து விட்டவை. இயற்கை, குழந்தைமை தேடல், பழைய, பால்ய பருவ அசட்டு நினைவு ஏக்கங்கள் மற்றும் வெற்றுக் கனவுகள், தினசரிப்பேச்சுகள் ஆகிய பொத்தாம் பொதுத் திசுக்களாலான தொங்கு சதையில் அகோரமாக வழிகிறது.

விமர்சனப்பொறியின் சிந்தனா, தர்க்கவாதப் பாகங்களை அடைத்து சம்பிரதாயமான கொச்சை இணைப்புகளைச் செய்ய வாசகனை தூண்டுவது. அமெரிக்க கவி விமர்சகர் வாலஸ் ஸ்டீவன்ஸ் மொழியில் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் "a failure of feeling". என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது.

தர்க்கமற்ற, வெற்று அலங்காரமாக, பிரச்சார முழக்கமாக, வெறும் கூச்சலாக பெரும்தோல்வி அடைந்துள்ளது. நாம் இன்பாகுப் பண்டங்களின் பசப்பு ருசிக்கு ஆட்பட்டவர்கள், நமக்கு தர்க்கச் சிந்தனை, விமர்சனத் தத்துவம், மற்றும் சவால்களும் நெருக்கடிகளும் பரிச்சயமில்லை.

இந்த விமர்சனப் புரிதலின் அடிப்படையில் குட்டி ரேவதியின் கவிதைகளை வாசிப்பிற்கு எடுத்டுக் கொள்கிறேன். குட்டி ரேவதிக்கான விமர்சனம் சுகிர்தராணி, சல்மா மற்றும் மாலதி மைத்ரி ஆகியோருகு பொருந்தாது எனினும் அடிப்படை புரிதல்கள் அடிப்படையிலும் பொதுவாக அம்மாதிரியான போக்குகள் என்ற அளவிலும் இவர்களுக்கும் பொருந்தக் கூடியதே.


கவிஞர் தேவதேவன் பூரித்து போன குட்டி ரேவதியின் பூனையைப் போல் அலையும் வெளிச்சம் தொகுதியுடனே நாம் துவங்குவோம். "இருப்பின் வாசனை" என்ற கவிதையில், 'உயர் ரக வாசனைத் திரவியமாய் இருக்கிறது இருப்பு என்று தொடங்கி, 'புகைந்து புகைந்து காற்றையும் நடுங்க வைப்பதான (!) அந்த வாசனை எந்தப்பூவின் இறுதித் துளியோ? என்று கேட்கிறார். பூவின் இறுதித் துளிக்காக வருத்தப்படும் போலித் தனத்துடன், பூவின் இறுதித் துளி உயர்ரக சென்ட்களாய் மாறுகிறது என்றால் எப்படி உயர் ரக வாசனைத் திரவியமாய் இருக்கிறது இருப்பு என்று எப்படி எழுத முடியும்? இதில் வேடிக்கை என்னவென்றால் பூ என்பது தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சென்ட்களாய் மாறுகிறது என்பதை குட்டி ரேவதி இவ்வாறு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உயர்ரக வாசனைத் திரவியமாய் இருக்கிறது இருப்பு என்று கூறப்போக, இவர் எழுதியதன் நோக்கம் புரியாத தேவதேவன் இந்த வரியை வைத்துக் கோண்டு பாரதி, எமிலி டிக்கின்சன் என்று சிலிர்ப்படைந்திருப்பதன் மேல் நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, முழுக் கவிதையையும் படிக்காமல் இந்த வரியை மட்டும் எடுத்துக் கொண்டு பிளர்ப் ரக வாசகமாக மாற்றியிருப்பரோ என்றே தோன்ற்கிறது.

நாம் கவிதைக்கு திரும்புவோம். அந்தக் கவிதையில் அடுத்ததாக காலாதீதத்தை கரைத்து... மெல்லக் கணங்களய் கரைந்து... என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுகிறார். ஆனால் எந்த வித தர்க்க இணைப்புகளும் இல்லை. வாசனை என்ற புலனுணர்வு எங்கிருந்து வந்தாலும் கண நேர இருப்பிற்கு பிறகு மறைந்து விடக்கூடியதே. பூவின் வாசனைக்கும் வாசனைத்திரவியத்திற்கும் இவர் இடும் இருமை மிகவும் கொச்சையான கற்பனை. சில சென்ட்கள் பூவின் வாசனையைக் காட்டிலும் அதீத உணர்வுகளை எழுப்புவது. பூவின் வாசனை/வாசனைத்திரவியம் என்பதை பெண்/ஆண் என்பதாய் உருவகப்படுத்தியிருக்கவேண்டிய வாய்ப்பு இருந்தும் சரியான பார்வையில்லாததால் அதனை நழுவ விட்டுள்ளார். மீண்டும் பூ காலாதீதம் வாசனைத் திரவிய்ம் கணங்களின் கரைவு என்ற இருமை கொச்சையானதே. இதற்கு இடையில் யாரோ ஒருவரின் 'னினைவின் வாசனை அரிப்பு' வேறு வந்து விடுகிறது. கவிதையின் கடைசி வரிகள் simply trash.

என்று கூறுவது தவிர வேறு வழியில்லை. இது போன்று நேர்மையற்ற ஒரு உணர்வாக இந்த கவிதை வெளி வந்துள்ளது. இங்குதானப்பா துவங்கியது இந்த வாசனை... இவரது அனைத்துக் கவிதை தொகுதிகளிலும் வாசனை நம்மை ஓட ஓட விரட்டுகிறது.

பலரும் 'பூரித்து' போன 'முலைகள்' கவிதை தொகுப்பில் "நினைவின் மேடு" என்ற கவிதையில் கடலில் உடல் நிமிர்த்தி நடந்த ஒருத்தி, மண்ணைப்பூசி நாய்க்கு உயிர்தந்த ஒருத்தி 'நூறு நூறு ஆண்டுகளின் வாசனையை ஒரு தாமரை போல சுமந்த ஒருத்தி.

"போதையின் குறிகுணங்கள்" என்ற கவிதையில் "உயிர்ச்சுனைப் பீறிடும் மாருதம்" இன்னொரு பருவத்தின் பாடலை எழுதுகிறது. (அதாவது உடற்பருவம் எனும் உடற்கூறியல் தற்செயல், புற இயற்கையின் காரியமாய் அசட்டு தற்குறிப்பேற்றம் எய்துகிறது)

'அடையாளத்தின் மீது நீர் தெறிக்கும்போது' என்ற கவிதையில் தலைப்பிலேயே முகத்திலடித்தாற்போல் பாலியல் இச்சை வெளிப்படுகிறது, அதாவது இக் கவிதையில் மரத்தின் ரசத்தை இலை உறிஞ்சி விட்டு கீழே விழுந்து விடுகிறதாம், மரமே பூவின் மகரந்தங்களைச் சுமந்து பாலியல் மரமாக நிற்கிறதாம் (பாம்பிற்கு பால் வார்க்கும் தமிழ் சினிமா குலமகள் போல் மரத்திற்கும் பால் வார்க்கும் குலமகளோ குட்டி ரேவதி?)இது வெளிப்படையாகவே ஆண்/பெண் உறவு குறித்துத்தான் எழுதப்பட்டுள்ளது. மரம் என்பது இலைகள் உள்ளிட்ட அதன் அத்துணை அம்சங்களுடன் உள்ள முழுமை. அதிலிருந்து இலை உதிர்வது இயற்கை நியதி. இலை ஆண் கைவிட்டு உதிர்ந்த பிறகு மரப்பெண் பூவின் மகரந்தங்களை சுமக்கிறாளாம். ஆண்/பெண் உறவுகளின் உள்ளார்ந்த தாத்பர்யங்களை இயற்கை உலகப் பொருட்களுக்கு ஏற்றி உருவகிக்கும்போது ஆண்/பெண் உறவுகளும் பிரிவுகளும், ஆசா பாசங்களும், உணர்வுகளும் இயற்கையே என்ற தர்க்கத்திற்குத்தான் இட்டுச் செல்லும். ஏன் பாலின பேதமே இயற்கையானதுதான் என்ற கருத்தியலுக்கு ஆதரவானதுதான் இந்த உருவகப்பிரயோகம்.

ஆண்/பெண் பேதம் பண்பாட்டுக் கட்டமைப்பே என்றுதானே தீவிரப் பெண்ணிய கோட்பாடுகள் கூறுகின்றன. ஆண்/பெண் பேதங்களை இந்த பேதங்களின் அத்தனை எதார்த்த விளைவுகளையும் குட்டி ரேவதி இயற்கையை ஒத்ததாகக் கூறுவது சுய முரண்பாடு என்பதோடு வெகுஜனக் கருத்தியலை ஒத்ததே. ஆனால் இந்தக் கவிதையிலும் இறுதிப்பத்தியில் ஜன்னலின் அமர்ந்த பறவை பாடலொன்றை விட்டுச் செல்ல 'பூப்பு வாசனை' அவளுக்கு நினைவுக்கு வருகிறது. இயற்கை அங்கக உருவகங்களை மிகவும் கொச்சையான அசட்டுணர்ச்சியுடன் பிரயோகிக்கிறார் குட்டி ரேவதி. மரம்/பெண் உருவகம் வெகுஜனக் கற்பனையில் "க்ளிஷே" யாக்கப்பட்ட ஒன்று. பொதுப்புத்தி புரிதல்களை உடைக்காமல் "உடல் மொழி" கட்டமைக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்வது என்ன நியாயம்?

பரத்தையின் பாதங்களை வருடும் முட்கள் கவிதையில் அவள் "எல்லா மலர்களின் வாசனைகளையும் அறிந்திருந்தாள் என்று வருகிறது. "உடலில் இரும்பின் வாசனை" என்று "னினைவின் நகக்கணுக்கள்" என்ற கவிதையில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உடல் , மரம், பூ, இலை ம்கரந்தம், என்ற க்ளிஷே ரக ஒப்புமைக்குள்ளாகிறது ஆனால் இங்கு மட்டும் திடீரென இரும்பின் வாசனை ஏற்படுத்துகிறது. கிறுக்கி கவிதையில் மல நாற்றம், மாமிச நாற்றம், ரத்த நாற்றம் ஆகியவற்றிற்கு கிறுக்கி பழகிப்போவதாக வருகிறது. காதலுக்குப் பின் என்ற கவிதையில் "துர்பாக்கியமானது" என்றாலும் ஒருவனின் எரிகின்ற சவத்தின் மீது குட்டி ரேவதியின் மூக்கு சென்று வாசனை பிடிக்கிறது. "என் காமத்தின் ஒளி' என்ற கவிதையில் எவனோ ஒருவன் வருடிப்பார்க்காத காமம் தெருவெல்லாம் சுடரைப்போல அலைந்து பின்பு குப்பைகளை எரிக்கும் நெருப்போடு சேருகிறதாம். உடலின் தீ வாசனையில் இந்தக் காமத்தீ சடசடவென்று எரியும் ஒலி கேட்கிறதாம். பொன்மேனி உருகுதே... பாடல் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மழைக்குப்பின்பான பொழுதுகளில் என்ற கவிதையில் (மழைக்குப் பிறகு என்று கூறினாலே போதுமானது.ஆனால் பின்பான, முன்பான, அவனாகிப்போன, அவளாகிப்போன என்றெல்லாம் எழுதினால்தான் அது "கவித கவித" ஆகும் போல் இருக்கிறது). காலத்தின் மீதான சந்தேகம் வலுக்கிறதாம். அது என்ன திடீரென காலத்தின் மீது சந்தேகம்? அப்போது கருணையின் முகத்தோடு மழை வருகிறதாம், "பின்பு உழைப்பின் வாசனையை" வீசி அடங்குகிறதாம். மழைக்கும் உழைப்பின் வாசனைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? காலத்தை ஏன் சந்தேகிக்க வேண்டும்? இதற்கெல்லாம் எந்த விதமான தர்க்க பூர்வ தொடர்புகளை நாம் எதிர்பார்த்தோமானால் நாம் ஆணாகிவிடுவோம்.


"இன்று முத்தத்தின் மீது படர்ந்திருக்கிறது நூலாம்படை" யில் "பால் சுரக்கும் வாசனை" பீறிட்டு வழிகிறதாம் 'அவனைச் சந்தித்த அன்றுதான் பிறந்த" முத்தம். "இந்தக் கோடை காலத்தை உனக்காகவே அழைத்து வந்தேன்" (தலைப்பை கூட மடக்கி எழுதி தலைப்புக் கவிதையாக்கியிருக்கலாமே!) என்ற கவிதையில் கடந்த கால கூடல் ஒன்றை நினைவுபடுத்டுகிறது "அணைத்த விளக்கின் வாசனை". வாசனை நினைவிருப்பதோடு கூடலையும் அது நினைவு படுத்துகிறது. அதாவது நினைவிலும், மனதிலும் எல்லமே தொடர்ச்சிதான், இச்சையையையும் ஒரு சில பாலியல் நினைவுகளையும் அடக்கி ஒடுக்கும் நனவிலியையே கட்டமைக்கும் அடக்கி ஒடுக்கும் கூறுகள் இல்லாத மனமும் நினைவும் சாத்தியமேயில்லை. ஆனால் குட்டிரேவதிக்கோ எல்லாமே பளிங்குபோல் நினைவின் தொடர்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு வாசனையும், நாற்றமும் குட்டிரேவதியின் பிரதிகளில் நிரம்பி வழிகிறது. ஏகாந்தம் என்ற கவிதையில் "எனை நினைத்து ஏகாந்தத்தில் இருப்பதாய்" தமிழ் சினிமா பாணி காதல் காட்சியில் ஒருவன் இருப்பதாய்... இல்லை இல்லை "இளவாசனை" கொண்ட ஒருவன் காத்திருப்பதாய் வருகிறது. எல்லாமே வாசனைதான். இளமையும் கண நேரம் தோன்றி மறையும் வாசனைதான் குட்டி ரேவதியை பொறுத்த வரை. இது போன்ற கண நேரம் மட்டுமே தங்கி நினைவிலும் தங்காமல் நிரந்தரமாக மறையும் ஒன்று எவ்வாறு தொடர்ந்து சாதரண ஏக்க அனுபவங்களையும் ஏதோ உன்னத, காலத்தை கடந்த,அழிவைக் கடந்த அனுபவமாக கொச்சை கற்பனை எய்துவது எவ்வாறு என்று குட்டிரேவதிதான் கூறவேண்டும்.

பிறகு மரணத்தின் வாசனை, பாம்பின் தவிட்டு மணம், மாலையின் பழுப்பு ஒளி வாசனை. என்று அந்த தொகுதி மட்டுமல்லாது, தனிமையின் ஆயிரம் இறக்கைகள் தொகுதியில் 'இதழ்களுக்கிடையே மணக்கும் தாவரங்கள் முளைத்தெழுகிறது. இதழ்களில் தாவரங்கள் வாசனை வந்தால் பபிள்கம் பயன்படுத்தவேண்டியதுதானே? பிறகு புல்லின் வாசனை, தேனீர் மணம், காலத்தின் வாசனை, கடிதத்திலிருந்து எழும் நறுமணப்புகை, 'விரல் நசிவுகள்' கவிதையில் 'ஒரு நாடோடியின் வியர்வையில்... அவன் ருசித்த பெண்களின் உமிழ் நீரும், வயல் வெளிகளும், மலை மடிப்புகளும் மணக்கின்றன'.

"பனியின் வாசனையும் சில்வண்டுகளின் சத்தமும் " என்ற லெஸ்பியன் உறவு பற்றிய கவிதையில் 4 முலைகளும் ஆண் விரல் ரணங்களை மறுத்து வந்தனவாம், இருப்பினும் அவள் சுவாசத்தில் பனியின் வாசனை எழ இவள் ஆணாக மாறியிருந்தாளாம். அது எப்படி பனியின் வாசனை அவளை ஆணாக மாற்றியது என்று தெரியவில்லை. இதெல்லாம் வெறும் அலங்காரமாக எந்த வித ஆழமான உணர்வும் இன்றி வெளிப்படும் போலிக் கவிதைகளே.

கண்களுக்குப் பழகாத இருட்டு என்ற கவிதையில் வன்புணர்ச்சி பற்றி பேசப்படுகிறது. அந்த அறை பல கருவறைகள் கருகிய நாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. எல்லாமே எப்படி ஏதோ ஒரு நாற்றமாக வாசனையாக மாறுகிறது என்பது புரியவில்லை. இதைவிட ஆழமான உருவகங்களை கற்பனை செய்ய திராணியில்லை என்பதையே இது காண்பிக்கிறது. இந்தக் கவிதை ஒரு சினிமா பாணி ஹீரோயினிச, விஜய் சாந்தி சாகச ரக கவிதை. நாட்குறிப்பிலிருந்து சில இறகுகள் கவிதையில் புடவையின் மடிப்பின் "கதைக்குள்ளிருந்து வகைவகையான நறுமணங்கள்" எழுகின்றன. பிறகு உதிர வாசனை இண்டு இடுக்குகளிலெல்லாம் கமழக் கமழ வருகிறது. முத்தாய்ப்பாக "எரிந்து போன வீடு" என்ற கவிதையில், "உடலை லட்சமாய் எறும்புகள் பிய்த்துண்ணும்போது 'அழகின் வாசனை' மூக்கை துளைக்கிறது.
எறும்புகள் திண்ணும் உடலிலிருந்து அழகின் வாசனை எங்கிருந்து வந்தது? அந்த உடல் என்ன மறை ஞானியின் உடலா அழகின் வாசனை வீச? அல்லது இறையுணர்வு வாதிகளின் ரகசிய வாசனைத் தேட்டமா? செல் செல்லாய் பிய்த்துண்ணப்படும் உடலிலிருந்து 'அழைன் வாசனை' வருகிறது என்றால் அது ஒரு தீவிர மன நோய்க்கான அறிகுறியாக்வே இருக்க முடிய்ம் என்ற முடிவுக்கு நாம் வருவது தவிர்க்க முடியாததே.

போதும்! வாசனையும் நாற்றமும் முடிந்து விட்டது என்று "உடலின் கதவு" வை திறந்தால் அங்கு "அரசியின் மேதமை" கவிதையில் மீண்டும் வாசனை. பாலியல் அடக்கு முறையிலிருந்து விடுவித்துக் கொண்ட அரசி "முழு நிலவின் இரவுகளில் உடலை பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள்" என்று வருகிறது. பாலியல் விடுதலைப் பெற்றதாக கூறும் ஒரு பெண்ணின் உடலை பிணமெரியும் நாற்றத்தோடு ஒப்பிடுகிறார் என்றால் இவரது நாராசக் கற்பனைக்கு வேறு உதாரணங்களும் வேண்டுமோ? பாம்புகள் புணரும் போது சந்தன மணம், கோடையின் முதல் நாள் மாம்பழ வாசனையோடு பிறக்கிறது.

ஆனால் 'சுடுகாட்டின் எரிமணம்' என்ற கவிதையில் பிராந்தியின் குழறல் வாசனை என்று வரும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு வேளை சுகுணாவிற்கு காது கேட்காதோ? அதனால்தான் குழறல் கூட வாசனையாக வருகிறது. நாட்டாமை என்ற திரைப்படத்தில் சரத் குமார் விட்ட அறையால் காது செவிடான கவுண்டமணி வழியில் ஒருவரிடம் "ஏங்க கூப்டீங்ளா, இல்ல கூப்டா மாதிரி வாசனை வந்துச்சுங்க' என்று கூறும் ஜோக் நினைவுக்கு வர பிராந்தியின் குழறல் வாசனை நம்முள் சிரிப்பை வரவழைக்கும் என்பது மிகையானதே அல்ல.

'புராதன வெளி' என்ற பெண் உருவம் 'அந்தரங்க ஆழங்களை' அறியும் பெண் உருவம் என்னதை அறிகிறாள் என்றால் நிண நீர் மணத்தையும், வியர்வை நாற்றத்தையும்தான். இதனோடு சுரோணிதப் பிசுபிசுப்பும் அறிகிறாராம். அவ்வளவுதான்! அந்தரங்க ஆழங்களை அவர் அறிந்ததாக குட்டி ரேவதி அறிந்து வைத்திருக்கிறார்.

வாசனையும் துர் நாற்றமும் இப்பிரதிகள் நிறைய விரவிக் கிடக்கிறது. வாசனை குறித்த ஒரு பீடிப்பு மன நோய் இருப்பதை எடுத்துரைக்கிறது. செவி, சருமம், கண், நாக்கு, மூக்கு ஆகியவை ஞானேந்திரியங்கள் என்று கூறுவதோடு மனத்தையும் இந்திரியமாக வரித்து ஞானேந்திரியம் ஆறு என்று வகுத்து வைத்திருக்கும் மரபு நம்மிடையே உண்டு.

ஐம்பெரும் பூதங்களுக்கு சாங்கியம் கீழ்வரும் பண்புகளையும் புலனறிவு இணைவுகளையும் வழங்குகிறது: அனைத்து பண்பிற்கும் முன் தோன்றுதலால் ஆகாயத்தின் பண்பு ஓசை முதலாவதாக கூறப்படுகிறது. இரண்டாவதான காற்றின் பண்பு ஊறு. தீயின் சிறப்புபண்பு உருபு மூன்றாவது; நீரின் சிறப்புப் பண்பு சுவை நான்காவது. இதில் நாற்றம் என்பது நிலத்தின் சிறப்புப் பண்பு.

இதில் முதல் நான்கும் பூரணப்பொருள்கள். நிலத்தின் பண்பான நாற்றம் என்ற நாசியின் செயல்பாடு பூரணப்பொருளில் சேர்க்கப்படவில்லை. நாசியின் செயலான நாற்றம் அறிவிற்கான பூரணப்பொருள் என்பதை சாங்கியம் ஏற்கவில்லை.

குட்டி ரேவதியின் இந்த 4 கவிதைத் தொகுதிகளிலும் வரும் நாற்றம், மணம் பற்றிய குறிப்புகளில் அந்தந்த இடத்தில் அவை இடம்பெறுவதற்கான எந்த வித தர்க்க நியாயமும் இல்லை. வெறும் இடத்தை இட்டு நிரப்புவதற்கான அலங்காரமாக வந்து விழுந்துள்ளன. மணம் போன்றெ தீ உள்ளிட்ட பிற குறிப்புகளும் வெறும் குறிப்புகளாய் இருக்கிறது. குறிப்புணர்த்தலாய் இல்லை. இதனால் சிக்கல்களையும் ஆழத்தைஉம் தேடும் எந்த வாசகனுக்கும் இவரது கவிதைகள் சோர்வையும் ஏமாற்றத்டையும் ஏற்படுத்தும் என்று கூறினால் அது மிகையாகாது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி சங்கிலியில் முதுகுத் தண்டு முழுமைபெற்று கைகள் மேலுயர உடல் நிமிர்த்தி மனிதன் வாழத் துவங்கும் முன் முகர்தல் பிரதானமாக இருந்தது என்பது உயிரியல் விஞ்ஞானத்தின் துணிபு. முதுகு நிமிர்ந்த பிறகு நாசிகும் நிலத்திற்குமான முகர்தல் உறவையும் அது சார்ந்த பிற பண்புகளையும் இழந்து விட்டான். மூக்கிற்கு இருந்து வந்த பாலியல் தொடர்புகள் அறுபட்டுப் போனதாய் சிக்மண்ட் ஃபிராய்டு கூறுகிறார். வாசனைக்கும் பாலியலுக்கும் தொடர்புகள் இருப்பதாய் ஃபிராய்டு கூறுகிறார்.

பிரஞ்சுக் கவிஞர் சார்லஸ் பாதலேர் பல்வேறு நறுமணங்கள் பற்றிய படிமங்களை ஏறத்தாழ அனைத்துக் கவிதைகளிலும் எழுதியுள்ளார். அதில் காமம் முதல் அனுபூதிவாத மறை அனுபவங்களுக்கான குறியீடாக வருகிறது என்று பாதலேர் வியாக்யானவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளனர். பாதலேர் ஒரு ஒய்வு ஒழிச்சலற்ற நறுமண விரும்பி என்று கூறப்படுவதுண்டு. வில்லியம் ஃபாக்னரின் "சவுண்ட் அன்ட் ஃப்யூரி நாவலில் வரும் பெஞ்ஜி என்ற கதாபாத்திரம் அனைத்தையும் முகர்தலாலேயே வெளிப்படுத்துவான். இவனுக்கும் இவனது மூத்த சகோதரிக்கும் உள்ள சிறுபிராய பாலியல் உறவு "She Smelt like trees"

என்ற வரியின் மூலம் நாவல் முழுதும் வந்த வண்ணம் இருக்கும். தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பரிபாடல் முழுதும் பல்வேறு நறுமணஙள் காமக் கிளர்ச்சியின் உட்குறிப்புகளாய் வருகிறது. வாசனை அல்லது நறுமணம் மீதான குட்டிரேவதியின் பீடிப்பை அவர் தர்க்கபூர்வமாக சிந்தித்திருந்தாலோ, அல்லது வாசனை ஏற்படுத்தும் சிறு சிறு உணர்வை பேருணர்வாக கலைப்படப்பில் செய்ய முடிந்திருந்தாலோ அவர் தற்போது பிரஸ்தாபம் செய்யும் "உடல் மொழி" லபித்திருக்கும். வெறும் வெற்று பீடிப்பாய் முடிந்து போனதால், இவையெல்லாம் வெறும் olfactory disorders என்றே நம்மை நினைக்கத் தூண்டுகிறது. எந்த ஒரு பண்பு ரீதியான வாசனை உணர்வு இல்லாத anosmia வும், பல்வேறு வாசனைகளை தரம் பிரித்து பாக உணரும் தன்மையற்று அனைத்தையும் முகர்தல் அதாவது மணமில்லாதவற்றையும் முகர்ந்து தள்ளி வாயும் மூக்கும் ஒன்றாகத் தோன்றும் ஜந்துக்களுக்கு இருக்கும் hyperosmia வும் கெட்ட நாற்றமும் வக்கிரமான வாசனை உணர்வும் உள்ள dysosmiaவும், சில வேளைகளில் மோப்பத்தூண்டுகோல் இல்லாமையால் இல்பொருள் கற்பனா வாசமாகிய phantosmia வும் ஒருங்கிணைந்து மோப்ப மருட்சியில் சிக்கியுள்ளாரோ குட்டி ரேவதி? ஒரு வேளை மண்டைக்குள் திடுமென பற்றிய 'பொறி'யால் (காண்க உடலின் கதவு பக்.17.) மூளையில் பொதிந்துள்ள மண்டைக்குடுவை (Cranial index) பிரச்சனையாகிவிட்டதோ என்னவோ இதனால் வாசனை மருட்சிகள் தோன்றியுள்ளதோ?

Share this Story:

Follow Webdunia tamil