மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்களை முழு அளவில் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக மாற்றவும்,, போதை மருந்து பயன்படுத்துவோருக்கு மறுவாழ்வு அளிக்கவும் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மது, போதை அடிமை நோயாளிகளுக்கும், தெருவோர சிறுவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், சமுதாயத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்களுக்கும் இலவச உணவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறினார்.
முழு மனிதராக குணமடைதல் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டத்தின் ஒருபகுதியாகவே மத்திய அரசு இதனை மேற்கொள்ளவிருப்பதாகவும், போதைப் பொருள் மற்றும் குற்றம் இழைப்பதில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்காக மத்திய அரசின் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பாதிப்புக்குள்ளானோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கலந்தாய்வு நடத்துதல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம் என்று கூறிய அவர், தன்னார்வ மற்றும் இதர அமைப்புகள் மூலமாக இது செயல்படுத்தப்படும் என்றார்.
ஆல்கஹால் மற்றும் போதை மருந்து பழக்கத்தில் இருந்து அவர்களை முற்றிலுமாக வெளிக்கொணர்வதோடு, அவர்களுக்கு வேலை அளித்து பொறுப்பினையும் கொடுப்பதால் சமுதாயத்தில் மீண்டும் அவர்கள் ஒருமைப்பாட்டுடனும், தனி நபர் வளர்ச்சியோடும், செயலாற்ற முடியும் என்றார் அவர்.