"கிணற்றுள் எச்சில் துப்பாதே-பின்னர் அதையே நீ குடிக்க நேரலாம்!" என்கிறது ஜித்திஷ் பழமொழி.
இதற்கு, "என் வீட்டில் கிணறே இல்லையே; அப்புறம் எப்பூடி..." என்று வடிவேலு பாணியில் கேள்வி கேட்கும் நகரத்துவாசிகளுக்கும், "ஐயையோ! கிணற்றுக்குள்ளா...? "என்று அவசரமாக மறுக்கும் கிராமத்துவாசிகளுக்கும்தான் இந்தக் கட்டுரை!
"பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது" என்று பள்ளியில் நமக்கு அன்போடும் அக்கறையோடும் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.கல்லூரிக் காலத்தில் அது தொடர்பாக பலவற்றைப் பேசிப் பகிர்ந்து, தீமைகளை உணர நிதானமான வாய்ப்பு நிறையவே இருந்திருக்கிறது.
இவ்விரண்டு காலத்துக்கும் பின்னர், அவசர அவசரமாக வேறொரு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம்.முன்பு அன்பாகவும் அமைதியாகவும் சொல்லித் தரப்பட்ட அதே கருத்து, இப்போது நமக்கான எச்சரிக்கையாகி அச்சுறுத்துகிறது.
பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் "இங்கே எச்சில் துப்ப வேண்டாம்; மீறினால் தண்டிக்கப்படுவீர்" என்று எழுதப்பட்டிருப்பது இதற்குச் சான்று!
நின்று நிதானிக்க நேரம் இல்லாமலும், அருகில் தெரிவதை அவதானிக்க முடியாமலும் தினமும் தொடரும் நம் விரைவுப் பயணத்தில், தெருக்களின் நிறங்களை மறைக்கும் அளவுக்கு போதையூட்டப்பட்ட வெற்றிலை பாக்குக் கறைகளில் கால்கழுவியும், ஜலதோசம் பிடித்தவர்கள் உமிழ்ந்த எச்சிலில் சறுக்கியும் செல்வது சகஜமாகிவிட்டது.
இது அருவருப்பை ஏற்படுத்தும் பெருந்துன்பம் என்பதற்கப்பால், குழந்தைகள் உள்ளிட்டவர்களை கொடிய நோய்கள் சுலபமாகத் தாக்கி விடுகின்ற பாதக விளைவுபற்றிச் சிந்திக்கும் நிலையில் நாம் இல்லை.
பொது சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால், அபராதம் விதிக்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கனடா என்று தொடரும் பட்டியலில், அநேகமான ஆசிய நாடுகளுக்கு இடமில்லை.அதில் இடம்பெற நாம் முயன்றதும் இல்லை.
குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டு ஆசிய நாடுகளில் இயங்கிவருகின்ற அரசுசார்பற்ற சில சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதிலும் வருடமொன்றுக்கு 1.95 மில்லியன் குழந்தைகள் தொற்றுநோயால் இறந்துவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவில் மட்டும் தினமும் 5,000 குழந்தைகள் டயரியா, நியோமோனியா மற்றும் சுவாசத் தொற்றுநோய்களால் இறந்துவிடுகின்றனர் என்பதும் இவர்களில் பெருமளவினர் 3-5 வயதிற்குட்பட்ட வயதினர் என்பதும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது!
இந்தத் தொற்றுநோய்கள் பல்வேறு காரணிகளால் ஏற்பட வாய்ப்புள்ளது எனினும், சுகாதாரமற்ற சுற்றுச் சூழலே தலையாய காரணி என்பது வெளிப்படை.
இந்த உலகம் வட்டமோ சதுரமோ; அதில் வாழும் நாங்கள் வட்டமடித்து வாழ்கிறோம் என்பது மட்டும் நிஜம்! வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நம் கலாச்சாரமும், பண்பாடும் பகிரப்படுகிறது அல்லது பரஸ்பரம் கவரப்படுகிறது.
இதன்போது, நல்லவை போலவே தீய பழக்கவழக்கங்களுக்கும் நாம் அடிமைகளாகிவிடுவது தன்னியல்பாகவே நேர்ந்துவிடுகிறது. போதையூட்டும் மட்டமான புகையிலைப் பழக்கம், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தாவிவந்து நெடுங்காலமாயிற்று.
அதன் விளைவுகள் பாரதூரமானவை என்று மருத்துவத்துறை எவ்வளவோ அறிவுறுத்தியபோதிலும், மோசமான அந்தப் பழக்கம் இன்னும் பரவியே வருகிறது. இதன் விளைவு, அதனுடன் தொடர்பற்றவர்களையும் குழந்தைகளையும் தாக்கி அழிக்கிறது. நமது தீய பழக்கம் நம்மோடு முடிந்துபோனால் கூடப் பரவாயில்லை. அது பிறரைத் தாக்கவும் காரணமாக உள்ளது என்பது கொடுமையல்லவா?
எனவே, குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை என்றுணர்ந்து செயற்படுவோம்! இதற்காக நாம் ஒன்றுமே செய்யத் தேவையில்லை.
மாறாக, நீங்கள் சுற்றுச் சூழலை அசுத்தமாக்கும் நடவடிக்கைகளைச் செய்யாமலிருந்தாலே போதும். இதில் முதற்படியாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்போம்!நம் தலைமுறையை நோயிலிருந்தும் இறப்பிலிருந்தும் காப்போம்!!