Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளமையை தக்க வைக்கும் எளிய உணவுகள்!

இளமையை தக்க வைக்கும் எளிய உணவுகள்!
, வியாழன், 15 டிசம்பர் 2011 (18:38 IST)
என்றும் பதினாறாக இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்- சில வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால்...!

அப்படியான எளிமையான உணவுகள் பட்டியல் இதோ:

பாதாம்:

பாதாம் பருப்பில் முதுமையை தடுக்கும் வைட்டமின் "ஈ" அதிக அளவில் அடங்கியுள்ளது.ஆரோக்கியமான மேனி,தலைமுடி மற்றும் நகங்களை அளிப்பதில் பாதாமின் பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள் டயட்டீசியன்களும்,அழகு கலை நிபுணர்களும்.பாதாமில் உள்ள வைட்டமின் "ஈ", சூரியனின் புற ஊதா கதிர்கள்,காற்று மாசு போன்றவற்றால் நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.நாளொன்றுக்கு 12 பாதாம் பருப்புகளை ஒருவர் உண்ணலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அக்ரூட் பருப்பு

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "ஈ" சத்து நிறைந்துள்ளது.நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் அது உங்களது மேனியை மிளிர வைக்கும்.

வெள்ளரிக்காய்:

பாதாம், அக்ரூட் பருப்புகளெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள் சல்லிசான விலையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.நீர் சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் நமது மேனியை பட்டுபோல் மென்மையாகவும்,மினு மினுப்பாகவும் வைத்துக்கொள்ள அபார பங்களிப்பை செய்கிறது.

வெண்ணெய்

உடல் முதுமை அடைவதை தடுக்கும் உணவு வகைகளில் வெண்ணெயும் ஒன்று.சோர்வை போக்கி, தோல் வறண்டு போவதை தடுத்து,மேனியை பளபளக்க வைக்கிறது.

கற்றாழை:

கற்றாழையில் பல வகை உண்டென்றாலும், வீடுகளில் வளர்க்கப்படும் சோத்து கற்றாழை ஜூஸை தினமும் அருந்தி வந்தால், என்றும் இளமையாக தோற்றமளிப்பது சர்வ நிச்சயம்.வைட்டமின் ஈ,சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.முதுமையை தடுக்கும் இந்த சோத்துக்கற்றாழையின் மடலில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது.சற்று கூடுதலான கசப்பு சுவை கொண்ட இந்த மடலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், 35 வயது பெண்ணை கூட,"எக்ஸ்கியூஸ் மீ... நீங்க எந்த காலேஜ்ல் படிக்கிறீங்க?" என்று கேட்பார்கள்.இளமை தோற்றத்தை கொடுப்பது மட்டுமல்ல, உடல் பருமனை தடுக்கும் விதமாக கொழுப்பை கரைத்து, இருதயத்தையும் பாதுகாக்கிறது.மடலை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதனை சுமார் 30 மி.லி. அளவுக்கு ஜூஸ் எடுத்து, அதனுடன் 100 மி.லி. தண்ணீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

எள்:

மளிகை கடைகளில் மிக சாதாரணமாக கிடைக்கும் இந்த எள்ளை பலவிதமாக உணவில் சேர்த்துக்கொள்வார்கள்.இதிலும் வைட்டமின் "ஈ" சத்துக்கள் நிறைந்துள்ளதால், மேற்கூறிய பலன்களெல்லாம் இதிலும் அடங்கியுள்ளது.

பெர்ரி:

பெர்ரி பழங்களில் உடலில் செல்களை புதுப்பிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட் அதிக அளவில் உள்ளது.நாளொன்றுக்கு ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கப் செர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

கிரீன் டீ:

கிரீன் டீயின் நன்மை குறித்து நாம் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டோம்.இதிலும் ஆண்டியாக்ஸிடண்ட் மட்டுமல்லாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது வரை பல அற்புதங்கள் அடங்கியுள்ளது.

தண்ணீர்:

நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது சருமம் வறண்டு போகாமல் தடுக்கும்.

மேற்கூறிய உணவு பட்டியல் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய சாத்தியமானவை என்பதால்,சிறிது நேரம் ஒதுக்கி இவற்றை உண்டு வந்தால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்காது!



Share this Story:

Follow Webdunia tamil