குழந்தை பிறந்ததும் `இன்குபேட்டர்' எனப்படும் போதிய தட்பவெப்பநிலையில் பாதுகாப்புடன் வைப்பதற்கு உபயோகிக்கப்படும் காப்பக கருவியில் வைப்பதால், அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இன்குபேட்டர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட குழந்தைகள் மனஅழுத்த பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள், இன்குபேட்டரில் வைக்கப்படாத குழந்தைகளைக் காட்டிலும் 2 அல்லது 3 மடங்கு குறைவு என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக பாலூட்டிகளைப் பொருத்தவரை குழந்தை பிறந்ததும், தாயையும்-குழந்தையையும் பிரித்து வைப்பதால், பின்னாளில் மன அழுத்தம் ஏற்படும் என்று முன்னர் கூறப்பட்டது.
ஆனால், தற்போது இன்குபேட்டரில் குழந்தையை பராமரிப்பதால், அந்தக் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது மன அழுத்தம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்காக 1986ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 212 குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 16.5 விழுக்காட்டினர் இன்குபேட்டரில் வைக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே 21 வயதில் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களென்றும் தெரிய வந்துள்ளது.
ஆனால், இன்குபேட்டரில் வைக்கப்படாதவர்களில் 9 விழுக்காட்டினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர் என்றும் கண்டறியப்பட்டது.
மேலும், இன்குபேட்டரில் வைக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 15 வயதில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாவது 3 மடங்கு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உடலின் வெப்பநிலை, மூளைக்கு ஆக்சிஜனேற்றமாவது, ஒலி அற்றும் ஒளி போன்றவற்றை இன்குபேட்டர் சீராக வைத்திருக்க உதவுவதால், நரம்பு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.