சேமியா, ரவையில் இட்லி செய்யலாம்...
சேமியா, ரவை போன்றவற்றை உப்புமாதான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இட்லிகளாகச் செய்து சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் சுவையாக இருப்பதோடு வீட்டில் உள்ள அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள்.
அரிசி உப்புமா செய்யும்போது...
அரிசி உப்புமாவிற்கு ரவை உடைக்கும்போதே அத்துடன் மிளகாய் வற்றலையும் சேர்த்து உடைத்துவிட்டால் மிளகாய் வீணாகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
வெண்டைக்காய் மஞ்சூரியன் செய்ய...
கோபி மஞ்சூரியன் மசாலாப் பவுடர் ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கிறது. வெண்டைக்காயை ஒரு அங்குல அளவு வெட்டி, இந்தப் பவுடரை உபயோகித்து வெண்டைக்காய் மஞ்சூரியன் செய்து சாப்பிடலாம்.
வித்தியாசமான பஜ்ஜி செய்ய...
கடலைமாவை எப்பொழுதும் பஜ்ஜி செய்ய பயன்படுத்துவார்கள். ஒரு மாறுதலுக்குப் பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி, சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைத்து பஜ்ஜி செய்தால் ருசியாக இருக்கும்.
சுவையான பலகாரம் செய்ய...
பாசிப்பருப்பை வேகவைத்து ஏலப்பொடி, வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கிக் கொள்ளுங்கள். மைதாவைக் கரைத்து இந்த பாசிப்பருப்பு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பலகாரம் ரெடி.