’அம்மாவிற்காக பஸ் எரித்த உண்மை தொண்டன்’ - அநாகரிகமும், அடிமை புத்தியும்
’அம்மாவிற்காக பஸ் எரித்த உண்மை தொண்டன்’ - அநாகரிகமும், அடிமை புத்தியும்
தமிழக முதல்வரின் ஜெயலலிதா அவர்களின் பிறந்த கடந்த 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.
வழக்கமாக தங்களது கட்சித் தலைவர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அபிமானிகளின் பிறந்தநாளை கொண்டாடுவது இயல்புதான். ஆனால், அது சில சமயங்களில், தங்களது விசுவாசத்தைக் காட்டுவதற்கு அல்லது அன்பை வெளிப்படுத்துவதற்கு மட்டுமீறி செயல்படுவதும் உண்டு.
இந்நிலையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராகவும், நகராட்சி கவுன்சிலராகவும் இருப்பவர் பரிமளம்.
இவர், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே டிஜிட்டல் பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த பேனரில், தன் பெயருக்கு முன்பாக ‘அம்மாவிற்காக பஸ்சை எரித்து, சிறை சென்ற அம்மாவின் உண்மை தொண்டன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாக இந்நேரம் உண்மையான சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் அரசாக இருந்தால் பொதுச்சேதத்தை சேதப்படுத்தியதற்காக அவரை கைது செய்திருக்க வேண்டும்.
இரண்டாவது, உண்மையாக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால், இதுபோன்ற அராஜகமாக, வன்முறை செயலில் தான் ஈடுபட்டதை அப்பட்டமாக வெளிப்படுத்தியமைக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
மூன்றாவது, சாதாரண பொதுஜனங்களிடம் தங்களது அதிகாரத்தை காட்டத்துடிக்கும் காவல் துறையினர், இந்த பேனரை இந்நேரம் அகற்றி இருக்க வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்ண்டிருக்க வேண்டும்.
குழல் விளக்கு ஒன்றை உபயம் செய்யும் ஒருவர்கூட, குழல் விளக்குகள் முழுக்க தனது பெயர், கதவு எண், ஊர், முகவரி அனைத்தையும் விளம்பரப்படுத்தும் இன்றைய காலகட்டத்தில், ஒருவர் தான் செய்யும் செயலுக்கு, தான் செய்ததைவிட அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்வது என்பது இயல்பான விஷயமாகி விட்டது.
அதில், இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வது. மற்றொரு காரணம் தன்னைத்தானே சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது. இது ஒருவகையான புகழ் போதைதான்.
ஆனால், பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்பணித்துக் கொள்வதாக கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்களை படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
சென்ற ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, உண்மையாகவே தொண்டு மனப்பாண்மையுடன் சேவை செய்தபோதுகூட, ஆளும் அதிமுகவினர் தங்களது தன்மான தலைவியின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினர்.
இதனால், அதற்குப் பிறகு உதவி செய்ய முன்வந்தவர்கள் கூட சிலர் ஒதுங்கிக்கொண்டனர் என்பதுதான் உண்மை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண மணமக்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிய கொடுமையான சம்பவம் நடந்தேறியது.
மருத்துவமனையில், பிரசவமான பெண்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் முதலமைச்சரின் புகைப்படம் ஒட்டுப்பட்டே வழங்கப்பட்டது.
இன்னும் சிறிது நாட்களில் நாம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதின் அடையாளமாக நமது முகத்தில், பச்சையோ, ஸ்டிக்கரோ ஒட்டப்படலாம். விளம்பர மோகம் இப்படி அதிகாரக் கைப்பற்றலை நோக்கித் தள்ளிச்சென்றது.
அடிமைத்தனம், அநாகரிகமும்:
ஒரு பேருந்தை எரித்ததை பேனரில் போட்டு பெருமிதப்படும் அளவுக்கு பெருமைக்குரிய செயலானதா? சங்க இலக்கியப் பாடல்களில், போரில் எதிரிகளின் தலையை யார் அதிகமாக வீழ்த்துகிறார்களோ அவர்களுக்கு படைத்தளபதி பதவியும், பொருட்களும் அள்ளி இறைக்கப்படுவது குறித்து கூறப்பட்டு இருக்கும்.
ஆனால், தனது சொந்த மக்களை கட்சி விசுவாசத்திற்காகாவும், வெற்று கோஷத்துக்காகவும் அல்லது பதவி சுகத்திற்காகவும், இப்படி ஆளும் கட்சியினர் சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள். இதுவும் அடிமைத்தனத்தின் ஒரு வடிவம்தான்.
அதுவும் ஆளும் கட்சியில் உள்ள ஒருவர் மற்ற எதிர்கட்சிகளுக்கு உதாரணமாக இருப்பதற்கு பதில், அவமானகரமான ஒரு செயலை செய்திருப்பதை எப்படி கட்சித்தலைமை ஆதரிக்கிறது என்று தெரியவில்லை.
அதுவும் நகராட்சித் தலைவராகவும் வேறு உள்ளார். ஒரு நகராட்சியின் தலைவராக பதவி வகிக்கும் ஒருவரின் செயலை கண்டு எவ்வாறு ஒரு அரசு முகத்தை திருப்பிக்கொண்டு ஓரப்பார்வையால் பார்த்து சிரித்துக் கொள்கிறது என்றும் புரியவில்லை.
நாளை இந்த பேனரை பார்த்த மற்றொரு உண்மை தொண்டன் (!?) எதிரியின் தலையை வெட்டினேன், ரயில் எஞ்சினை கழற்றினேன், விமானத்திற்கு குண்டு வைத்தேன் என்று விளம்பரப்படுத்த மாட்டான் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் கிடையாது.
நாம் உண்மையிலேயே நாகரிமான சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா? அல்லது காட்டுமிராண்டித்தனமான சமுதாயத்தில் வாழ்கிறோமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
வன்முறையை நியாப்படுத்தி இவ்வளவு வெளிப்படையாக பெருமைப்படும் இவர்களை தலைமை ஊக்குவிக்கிறதா? என்கிற கேள்விகளை கேட்கிறார் மக்கள்.