இன்று ஜூலை மாதம் 11ஆம் தேதி. இதே தேதியில் 1930ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாறு ஒன்று நிகழ்ந்தது. அதாவது கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக கருதப்படும் டான் பிராட்மேன் இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 309 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஒரே நாளில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் டான் பிராட்மேன்தான்.
இன்று வரை அவரது இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதே போல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ரன்களை எடுத்ததும் இந்த நாளில் இதே டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்தது. டான் பிராட் மேன் 309 ரன்களைக் குவிக்க ஆஸ்ட்ரேலியா இந்த ஒரே நாளில் 458 ரன்களைக் குவித்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
டான் பிராட்மேன் உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுத்து இந்த நாளில் சாதனை புரிந்தார். மேலும் கால நேர அளவின் படி 214 நிமிடங்களில் இவர் எடுத்த இரட்டைச் சதம் இன்றளவும் ஒரு சாதனையாகும்.
டான் பிராட்மேனின் இந்த அதிரடி 334 ரன்கள்தான் அவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்களாகும். துவக்க வீரர்களுக்கு பிறகு 3-வது நிலையில் டான் பிராட் மேன் களமிறங்கினார். அவர் களமிறங்கும்போது ஆஸ்ட்ரேலியாவின் ஸ்கோர் 2 ரன்கள்.
'பாடி லைன்' பௌலிங்கிற்கு புகழ் பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லார்வுட், டான் பிராட்மேன் கையில் அன்று வசமாக சிக்கினார். அவர் 33 ஓவர்கள் வீசி 139 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
டான் பிராட்மேன் 334 ரன்கள் எடுத்து டேட் என்பவரிடம் ஆட்டமிழக்கும்போது ஆஸ்ட்ரேலியா 508/6 என்று இருந்தது. ஆனால் 566 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இவ்வளவு விரைவாக ரன்கள் குவித்தும் அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததுதான் ஆச்சரியம். ஏனெனில் அது 4 நாள் டெஸ்ட் போட்டியாகும். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு சுருண்டு அதன் பிறகு ஃபாலோ ஆன் விளையாடி 95 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து போட்டியை டிரா செய்தது. 5ஆம் நாள் ஆட்டம் இருந்திருந்தால் இங்கிலாந்து தோல்வி தழுவியிருக்கும்.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு டான் பிராட்மேன் கிரிக்கெட் உலகில் ஒரு அச்சம் தரும் பேட்ஸ்மெனாக மாறினார் என்றால் அது மிகையாகாது.