Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!

Advertiesment
ஆண் குழந்தை
, புதன், 22 செப்டம்பர் 2010 (17:08 IST)
ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

சரி ஆண்குழந்தைக்காக இத்தனை தூரம் ஆராய்ச்சியெல்லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண்களுக்காக இதுபோன்ற ஆராய்ச்சியெல்லாம் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டால், அதற்கும் "உள்ளேன் ஐயா!" என்று ஆஜராகிறார்கள் ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியவற்றுடன் - அதாவது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததோடு - ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான்...!

ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந்தைதானே?!

Share this Story:

Follow Webdunia tamil