Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமிகா ஏகாதசியில் துளசி வழிபாட்டு பலன்கள் !!

காமிகா ஏகாதசியில் துளசி வழிபாட்டு பலன்கள் !!
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
காமிகா ஏகாதசியின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பிரம்ம தேவர் துளசியின் பெருமையையும் கூறியுள்ளார். இந்த காமிகா ஏகாதசியில் துளசி கொண்டு பகவானைத் துதிக்கக் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறார்.


காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது.

துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும். விஷ்ணுதுளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார். வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும் போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்க வில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.

ஏகாதசி விரதமுறை: ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம். மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ள லாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் செய்த பாவங்களை நீக்கும் காமிகா ஏகாதசி விரதம் !!