தேன்: எந்த வகையான சருமமாக இருந்தாலும் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் தேன் சிறந்த பொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரும நலன் காக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும்.
சிறிதளவு தேனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடலாம். சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும் தேன் உதவும்.
மஞ்சள்: மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் குர்குமின் இயற்கையான ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைப் போக்கவும், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் உதவும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் உளுந்து மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்தில் பூசிவிட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
தேங்காய் எண்ணெய்: நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கும், தோல் மறுசீரமைப்புக்கும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுப்பதற்கும் துணைபுரியும் சிறந்த இயற்கை மூலப்பொருளாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. வறண்ட சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படக்கூடியது.
தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவும் ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி சருமத்தில் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்துவிட்டு இரவில் அப்படியே தூங்கிவிடலாம். காலையில் எழுந்ததும் முகத்தை குளிந்த நீரில் கழுவி விடலாம்.
கற்றாழை: எங்கும் எளிதாக வளரக்கூடிய கற்றாழை, பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இது, சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பண்புகளையும் கொண்டது. புதிய சரும செல்களின் வளர்ச்சியை தூண்டக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை கொடுக்க வல்லது.