புற்றுநோய் தாக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திறந்துவைத்தார்.
கமல் நடித்த நம்மவர் படத்திற்கு இசையமைத்தவர் மகேஷ். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2002-ம் ஆண்டு மரணமடைந்தார். சாகும் தருவாயில், புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக தனி சிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும் என்றும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தனது கடைசி விருப்பத்தை தெரிவித்தார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி சித்ரா மகேஷ் மற்றும் மகேசின் நண்பர்கள் மகேஷ் நினைவாக ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில், மகேசின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக தனி சிகிச்சை மையத்தை அமைக்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டது. இசையமைப்பாளர்களும், மகேசின் நெருங்கிய நண்பர்களும் நிதிதிரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட பழைய இடத்தில் (அடையாறு காந்திநகரில்) மகேஷ் நினைவாக புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்காக தனி சிகிச்சை மையம் உருவானது. மூன்றரை கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மையத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று திறந்துவைத்தார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா பேசுகையில், தமிழ்நாட்டில் 8 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இந்த மருத்துவமனைக்கு ஏ.ஆர்.ரகுமான் போன்ற மனிதாபிமானம் கொண்டவர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்தினம், புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் சாகர் ஆகியோர் பேசினர். புற்றுநோய் பாதித்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அனைத்து விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.