மதுரையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அட்டப்பட்டி என்ற கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது சிருஷ்டி மனநலக் காப்பகம். சுற்றிலும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் செடிகொடிகள். ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இந்த காப்பகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம்.
பெற்றோர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கும் இதயம் ஒன்று உண்டு. அதில் அவர்கள் அன்புக்காக ஏங்கும் ஏக்கமும் உண்டு. தன்னையே யார் என்று தெரிந்து கொள்ள முடியாத இவர்கள் சமுதாய சாடல்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சிருஷ்டி எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. இவற்றில் முதலாவது மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் முயற்சிதான்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்த தக்க தருணம் கிடைக்காததால் அது வெளிப்படாமலேயே மறைந்துவிடுகிறது. சிருஷ்டிக்கு வரும் ஒவ்வொரு மனநல பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தனித் திறமையை காப்பகத்தின் நிர்வாகம் முதலில் வெளியே கொண்டு வருகிறது. அதற்காக அனைத்துவித நடவடிக்கையையும் எடுக்கிறது.
உதாரணமாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இங்கு வருகிறார் என்றால் அவர் விவசாயம் சார்ந்த துறையில் ஈடுபடுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்று வெளியே செல்லும் போது தன்னம்பிக்கையோடு வாழ வழிவகை செய்கின்றது. இதே போல் பல்வேறு துறைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை நன்கு கண்டறிந்து வெளிக்கொணர்கின்றனர்.
இறை வழிபாடு, கடமையுணர்வு, எதிர்கால சிந்தனை ஆகியவற்றை அவர்களிடம் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிருஷ்டியை விட்டு மறுவாழ்வு பெற்று செல்லும் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தகுதியுள்ள நபராக மாற்றுவதில் சிருஷ்டிக்கு நிகர் சிருஷ்டியே. மனநலக் காப்பகம் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியாக கட்டப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணங்கள் சிருஷ்டியை பொறுத்தவரை மிகவும் அன்னியமானவை. அப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏதும் இங்கில்லை.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற இயற்கை சூழ்நிலையும் அதற்கேற்ற வசதிகளும் அவசியம் என்பதற்கு சிருஷ்டி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது. சோப்பு, ஊதுபத்தி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அவர்களே தயாரித்து விற்பனை செய்து வருவது நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.
மருந்துகளும் மாத்திரைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதோ இல்லையோ இங்கு காட்டப்படும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கி தருவது என்னமோ நிச்சயம் தான். இங்கிருந்து புது மனிதனாக செல்லும் அவர்கள் சமுதாயத்தின் கண்ணோட்டத்திலும் வீட்டாரின் கண்ணோட்டத்திலும் அவர்களின் மீதுள்ள எண்ணம் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை என்பது வேதனைக்குரியதே.
மனநல பாதிப்பு, அதற்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ, மனநல விவரங்கள் குறித்து பிரபல மனோ தத்துவ டாக்டர் சி. இராமசுப்பிரமணியம் அளிக்கும் விளக்கம்.
தொடரும் . . .