தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கு தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம் என்பது பற்றியும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சில தகவல்கள் குறித்து இந்தப் பகுதியில் பார்ப்போம்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகளவு பால் குடித்தால், அதிக பால் சுரக்கும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
எந்த உணவானாலும், திரவ உணவானாலும் அதிகளவு உட்கொண்டாலே போதிய அளவு தாய்ப்பால் சுரக்கும். குழந்தைகள் தாயின் மார்பகத்தில் எந்தளவுக்கு சப்பிக் குடிக்கிறார்களோ அந்தளவுக்கு பால் சுரக்கும்.
சிறிய மார்பகமாக இருந்தால் பால் சுரக்காது என்பதில் உண்மையில்லை. தோலுக்கு அடியில் எந்தளவு கொழுப்புச் சத்துகளைக் கொண்ட திசுக்கள் உள்ளதோ, அதனைப் பொறுத்தே மார்பகத்தின் அளவு இருக்கும். மார்ப்கத்தில் உள்ள சிறப்பு சுரப்பி மூலமாக பால் சுரக்கிறது. இந்தச் சுரப்பியானாது எல்லாப் பெண்களுக்கும் இருக்கும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வழக்கமாக எதனை விரும்பிச் சாப்பிடுகிறார்களோ அவற்றை எப்போதும் போல சாப்பிடலாம். சில உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என்று நினைத்தால், குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில உணவு வகைகளை தாய் சாப்பிடுவதால், குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை அளிக்கும்பட்சத்தில் அவற்றை தவிர்க்கலாம்.
முதல் குழந்தைக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டாலும், 2-வது குழந்தைக்கு தாய்ப்பால் நல்லமுறையில் கொடுக்கலாம். முதல் குழந்தைக்கு பால் கொடுக்கமுடியவில்லையே என்ற கவலையை விட்டு, நம்பிக்கையுடன் இருந்தால் அடுத்த குழந்தைக்கு சாதாரணமாக தாய்ப்பால் கொடுக்கலாம்.