கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைத்துள்ள மத்திய அரசு தனிநபர் வருமான வரியை குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து கார்ப்பரேட் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் விலையில் கழிவை வழங்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது தனிநபர் வருமானவரி வசூலிப்பில் அரசு சில மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தனிநபர் வருமான வரி சதவீதத்தை குறைத்து வழங்குவது மற்றும் வருமானவரி கட்டண பட்டியலை நான்கிலிருந்து ஐந்தாக மாற்றுவதன் மூலம் தனிநபர்களுக்கு வரிவிதிப்பு குறைத்து கையில் கொஞ்சம் அதிகமாக பணம் இருக்கும் என கூறப்படுகிறது. இதை நிறைவேற்றுவதற்கான ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இதை தீபாவளிக்கு முன்பே நடைமுறைப்படுத்தினால் வணிகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் உடனடியாக சாத்தியப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் புத்தாண்டிற்குள் புதிய வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்ப்பதாக பொருளாதார விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.