மேல்புறம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதை நெல் மற்றும் தென்னங்கன்று வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்புறம் வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகமான அம்பை 16 சான்று ரக விதைகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நெல் விதையின் விலை கிலோ ரூ 18.
ஆனால், ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இந்த விதைக்கு கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படுகிறது.
இதுபோல், தென்னையில் அதிக காய்கள் பெற்றிடவும், குரும்பல் உதிர்வதை தடுக்கவும், ஒல்லிக்காய், பேட்டுக்காய் வருவதை தவிர்க்கவும் நுண்ணூட்ட உரம் இட வேண்டும். இந்த நுண்ணூட்ட உரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் படி ரூ. 15 விலையும்ள் நெட்டை தென்னங்கன்றுக்கு ரூ.7.50 மானியம் வழங்கப் படுகிறது. ரூ. 25 விலையுள்ள நெட்டை, குட்டை தென்னங் கன்றுக்கு ரூ.15 மானியம் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகளை விவசாயிகள் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என்று இதுகுறித்து மேல்புறம் வேளாண்மை உதவி இயக்குநர் அவ்வை மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.