கரூர் அமராவதி ஆற்றின் சுற்றுச்சூழல் குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 1ம் தேதி அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 4ம் தேதி கரூருக்கு தண்ணீர் வந்தது.
ஆனால், அப்பிபாளையம் ஊராட்சி கருப்பம் பாளையம் முதல் அமராவதி ஆற்றின் இருபுறம் உள்ள சாயம் மற்றும் சலவை பட்டறைகளின் கழிவு நீரும், ஆற்றங்கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மாசடைந்த நீரும் ஆற்றில் திறந்துவிடப்படுவதால், அணையில் இருந்து வந்த நீர் முழுவதும் நஞ்சாக்கப்பட்டு விட்டது.
இதனால், அந்த தண்ணீர் பொது மக்களுக்கோ, கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கோ பயனுடையதாக இல்லை.
எனவே அமராவதி நதி மற்றும் பாசன வாய்க் கால்களில் எந்த இடத்திலும், எந்த வகையிலும் சாயம் மற்றும் சலவை பட்டறைகளின் கழிவுகள் கலக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் போன்றோரை உள்ளடக்கி மாவட்ட அளவிலான உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து சாயம் மற்றும் சலவை பட்டறைகளை கண்காணிக்கவும், நீர் மாதிரிகளை சோதிக்கவும் அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.
தேசிய சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அமராவதி சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து உண்மையான அறிக்கையை அளிக்க அரசு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.