அகில இந்திய அளவில் ரேடியோ நிலையங்கள் தயாரித்த ஒலி சித்திரங்களுக்கு நடந்த போட்டியில், ஹலோ எப்.எம். ரேடியோ தயாரித்த, வாழ்வுக்கு பிறகு கிடைத்த வாழ்க்கை என்ற வானொலி சித்திரத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
கோவா உலக படவிழா பனாஜி நகரில் நடந்தபோது, அதையொட்டி, ரேடியோ டாகுமென்டரி விழாவும் நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தனியார் எப்.எம். கேம்பஸ் ரேடியோ, சமுதாய வானொலி ஆகியவை பங்கு கொண்டன.
இதில் நடந்த போட்டியில், பல்வேறு மொழிப்பிரிவுகளை சேர்ந்த 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தி மொழிப்பிரிவு வானொலி ஆவணம் தயாரித்த நிகழ்ச்சிக்கு தங்க நட்சத்திர விருது கிடைத்தது. அடுத்த விருதான வெள்ளி நட்சத்திர விருது, ஹலோ எப்.எம்.ரேடியோ தயாரித்த "வாழ்வுக்கு பிறகு கிடைத்த வாழ்க்கை'' என்ற தமிழ் டாகுமென்டரிக்கு கிடைத்தது.
ஹலோ எப்.எம். தயாரித்த இந்த ஆவண சித்திரம் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சாலை விபத்தில் மரணம் அடைந்த ஹிதேந்திரனின் இதயம் உள்பட பல உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதுதான், வாழ்க்கைக்கு பிறகான வாழ்க்கை என்பது ஆகும். இந்த வானொலி சித்திரம் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இது சென்னை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, நெல்லை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் இருந்து ஒலிபரப்பாகும்.