குற்றாலம் அருவியில் ஒரு பாறையின் இடுக்கு வழியாக மட்டுமே தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா வந்துள்ள பயணிகள் வரிசையில் நின்று அருவியில் குளித்து வருகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சென்ற வாரம் கேரளாவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் தண்ணீர் கொட்டியது. அதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்தனர்.
ஆனால் இந்த நிலை ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. இந்த நிலையில் நேற்று குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவது நின்றுவிட்டது. ஒரு பாறையின் இடுக்கு வழியாக மட்டுமே தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் குதித்து கும்மாளமிட வந்த சுற்றுலாப் பயணிகள் முகம் வாடியது. எல்லோரும் வரிசையில் நின்று அந்த அருவியில் சிறிது நேரம் குளித்துவிட்டு செல்கின்றனர். வந்ததற்கு இதுவாவது கிடைத்ததே என்று சில சுற்றுலாப் பயணிகள் பேசிக் கொண்டது நமக்குக் கேட்டது.
நேற்று முன்தினம் மாலை குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. நேற்று மழை பெய்யவில்லை. வெயில் அடித்தாலும், குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வந்தது. பள்ளிகள் துவங்கும் நேரம் என்பதாலும், குற்றாலத்தில் நீர் வரத்து குறைந்ததாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமும் சற்று குறைவாகவே காணப்பட்டது.
இனிமேல் மழை பெய்தால்தான் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கும். கேரளாவில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு மழை நீடித்தால் குற்றாலத்தில் தற்போது உள்ள நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.