தமிழக சுற்றுலா துறைக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, தேசிய சுற்றுலா விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வழங்கினார்.
இந்திய அரசின் சுற்றுலா துறை, தமிழக சுற்றுலா துறைக்கு 2007-08 ஆண்டுக்கான, தேசிய சுற்றுலா விருதை வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் (2007-08), தமிழக சுற்றுலா தலங்கள் பற்றி சிறப்பான முறையில் விளம்பரப்படுத்தியதற்காக இந்த விருது, தமிழக சுற்றுலா துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்காக, வழக்கமான பணிகளை சுற்றுலா துறை செய்தபோதிலும், விருந்தினர் போற்றுதலும், சுற்றுப்புறத் தூய்மை, பசுமை சார் சுற்றுலா போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. கடந்த ஆண்டில் 17.53 லட்சம் வெளிநாட்டு பயணிகளும், 5.06 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள்.
இதனைக் குறிப்பிட்டு இந்த ஆண்டும் தமிழகத்திற்கே சிறந்த சுற்றுலாத் துறைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. விழாவில், தமிழக சுற்றுலா துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் எம்.ராஜாராம் ஆகியோரிடம் விருதினை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழங்கினார்.