திருச்செந்தூர்- சென்னை இடையே செந்தூர் விரைவு ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நேற்று தொடங்கி வைத்தார். செந்தூர் விரைவு ரயில் வாரத்தில் 5 நாட்கள் ஓடும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.
திருச்செந்தூர் - சென்னை இடையே விரைவு ரயில் விட வேண்டும் என்பது நெல்லை-தூத்துக்குடி-திருச்செந்தூர் வட்டார மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் நெடுங்கனவு நேற்று நனவானது.
திருச்செந்தூர் - சென்னை இடையே செந்தூர் விரைவு ரயில் தொடக்க விழா நேற்று மாலை திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியை அசைத்து புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய லாலு பிரசாத், மத்திய மந்திரி வெ.ராதிகா செல்வியின் வேண்டுகோளை ஏற்று இந்த ரயிலுக்கு செந்தூர் விரைவு ரயில் என்று பெயரிடப்படுகிறது.
இந்த ரயில் ஏற்கனவே அறிவித்த இடங்களை தவிர ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய ஊர்களிலும் நின்று செல்லும். வாரத்தில் 5 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். 5 நாட்களுக்கு பின்பு படிப்படியாக 7 நாட்கள் அறிவிக்கப்படும் என்றார்.