சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக எங்கும் ஏறி விரும்பும் இடத்தில் இறங்கிக் கொள்ளும் சுற்றுலாப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நவீனமான, குளிர்சாதன வசதி கொண்ட வகையில் உருவாக்கப்பட்ட இந்த பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு முறை பயணச்சீட்டு எடுத்துவிட்டால் போதும், அன்று முழுவதும் எங்கும் ஏறி எங்கும் இறங்கிக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம்.
இந்த பேருந்துக்கான வெள்ளோட்ட பயணத்தைத் சுற்றுலா, பண்பாட்டுத் துறை செயலர் வெ. இறையன்பு துவக்கி வைத்தார்.
கடந்த வாரம் இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகமும், மாநகர போக்குவரத்துக்கழகமும் தனித்தனியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
அதாவது, மாநகர போக்குவரத்துக்கழகம் சென்னையில் உள்ள மெரினா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய சிறுவர் பூங்கா உள்பட 12 சுற்றுலா மையங்களுக்கு போய் வரும் வகையில் 4 சொகுசு பேருந்துகளை இயக்கும்.
அதுபோல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், அதன் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கை சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக 4 சொகுசு பேருந்துகளை இயக்கவுள்ளது.
இந்தப் பேருந்துகளின் கட்டணம் 200 ரூபாய் அல்லது 250 ரூபாய் இருக்கும். ஒருமுறை டிக்கெட் எடுத்து இந்தப் பேருந்துகளில் நாள் முழுவதும் சுற்றுலா மையங்களுக்குப் போய் வரலாம். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.