சென்னையில் இருந்து மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் செல்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் இருந்து மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு விமானத்தில் குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ரூ.1,974, மும்பைக்கு ரூ.2,574, திருச்சிக்கு ரூ.1,674 என்ற கட்டணத்தில் செல்லலாம்.
சென்னையில் இருந்து மும்பைக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானம் செல்லும். மதியம் ஒரு மணிக்கு புறப்படும் விமானம், மும்பையை பிற்பகல் 2.50 மணிக்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் செல்லும். இந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 11.35 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத்தை மதியம் 12.35 மணிக்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் விமானம் செல்லும். சென்னையில் இருந்து மதியம் 12.45 மணிக்குப் புறப்படும் விமானம், திருச்சியை மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். வரும் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.